திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (அக்டோபர் 12) ஆய்வு செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிகார் நோக்கி சென்ற பாக்மதி அதிவிரைவு ரயில் நேற்று (அக்டோபர் 11) இரவு திருவள்ளூர் அடுத்த கவரப்பேட்டையில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பெட்டிகள் தடம்புரண்டது. 19 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக காயமடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு படை மற்றும் உள்ளூர் மக்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
தற்போது விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களில் கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றி, ரயில் பாதைகளை சரிசெய்யும் பணியில் திருவள்ளூர் ரயில்வே ஊழியர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக, கவரப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் மணிபிரசாத் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டதா? சதிவேலை காரணமாக விபத்து நடந்ததா? என்ற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் ரயில் விபத்து நாடு முழுவதும் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கூழாங்கல், கொட்டுக்காளி… அசைவற்றதா எதார்த்த சினிமா?
தொடரும் ரயில் விபத்துகள்: சிஏஜி அறிக்கையில் பகீர்… இனியாவது விழிக்குமா மத்திய அரசு?