வீட்டுக்குள் புகுந்த கழிவுநீர்: நள்ளிரவில் சாலை மறியல்!

Published On:

| By Gracy

திருப்பத்தூர் நகரப் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

திருப்பத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்து ஓடியது. திருப்பத்தூர் டவுன் டி.எம்.சி. காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு மழைநீருடன் கலந்த கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நேற்று இரவு திருப்பத்தூர் – சேலம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைப்பட்டது. தகவலறிந்த திருப்பத்தூர் டவுன் போலீஸார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், “இவ்வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு போலீஸார் நகராட்சி நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில், சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share