திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தைப் போன்று போலியான செயலியை உருவாக்காமல் இருக்க, தற்போது தேவஸ்தான இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் இனிமேல் புதிய இணையதள முகவரி மூலமாகவே முன்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான அதிகாரபூர்வ இணையதள முகவரியில் அனைத்து வகையான சேவைகளுக்கும் டிக்கெட் கிடைத்து வந்தது. இதில் தரிசன டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டன. இந்த இணையதளத்தைச் சிலர் போலியாகப் பயன்படுத்தினர். குறிப்பாக தரிசன டிக்கெட்டுகளைப் போலியாக முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றனர்.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, ஐ.டி. துறை பொது மேலாளர் சந்தீப் ரெட்டி ஆகியோர் கலந்து பேசி திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தைப் போன்று போலியான செயலியை உருவாக்காமல் மாற்ற முடிவு செய்தனர்.
தற்போது தேவஸ்தான இணையதள முகவரி ttdevasthanams.ap.gov.in என மாற்றப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான தரிசனங்கள், தங்கும் வசதிகள், நன்கொடைகள் மற்றும் பிற தேவையான தகவல்களுடன் திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்ட கோயில்களின் சேவைகள் மற்றும் அம்சங்கள் இந்த அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும். பக்தர்கள் இனிமேல் புதிய இணையதளம் மூலமாகவே முன்பதிவு செய்ய வேண்டும்.
திருப்பதி தேவஸ்தானத்தில் ஆதாரங்களின்படி, ஒரே இணையதளம், ஒரே பயன்பாடு என்ற தலைப்பின் ஒரு பகுதியாக அதிகாரபூர்வ இணையதளத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்