திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல்லை சேர்ந்த நெய் நிறுவனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுவில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
இந்தசூழலில் திருப்பதிக்கு ராஜ் பால் என்ற பெயரில் நெய் சப்ளை செய்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தரமற்ற நெய்யை கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கியதாகவும், அதை தேவஸ்தானம் திருப்பி அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 20) ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் அதிகாரிகள் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
அவர்கள் கூறுகையில், “நாங்கள் ஜூன், ஜூலை மாதத்தில் தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்தோம். அதன்பிறகு எங்கள் நெய்யை திருப்பதிக்கு அனுப்புவது இல்லை.
ஆனால் எங்களது நிறுவனத்தை குறிப்பிட்டு இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எங்களுடைய தயாரிப்பு பொருட்கள் எல்லா இடத்திலும் உள்ளது. அதில் மாதிரி எடுத்து நீங்கள் ஆய்வுக்கு அனுப்பலாம். திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்ததாக கூறப்படும் நெய்யில் எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை.
25 ஆண்டுக்கு மேல் இந்த துறையில் நாங்கள் இருக்கிறோம். இதுவரை எங்களுடைய தரம் தொடர்பாக எந்த புகாரையும் பிரச்சினையையும் நாங்கள் சந்தித்தது இல்லை. இதுதான் முதன்முறை.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அனுப்பப்பட்ட நெய்யில் குறைபாடுகள் இருப்பதாக வதந்தி பரவியது. அப்போதே உணவு பாதுகாப்புத் துறை மற்றும் அக்மார்க் அதிகாரிகள் பார்வையிட்டு, மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தனர். இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தனர். எங்கள் நெய் தூய்மையானது, சுத்தமானது. அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. எந்த ஆய்வகத்தில் வேண்டுமானாலும் ஆய்வுக்கு உட்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டனர்.
இந்தசூழலில் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் நெய்தான் பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என செய்திகள் பரவியது.
இதற்கு தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பு குழு மறுப்புத் தெரிவித்தது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்றும் முற்றிலும் ஆவின் நிறுவனத்தின் நெய்தான் அனுப்பப்படுகிறது என அறநிலையத் துறை தெரிவித்ததாகவும் கூறியது.
தற்போது திண்டுக்கல் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பா.ம.க நடத்திய மது ஒழிப்பு போராட்டங்கள்! பட்டியல் போட்ட ராமதாஸ்
சம்பளத்துக்காக அடித்துக் கொள்கிறார்களா குக் வித் கோமாளிகள்?