நெல்லை – திருச்செந்தூர் ரயில் சோதனை ஓட்டம்: போக்குவரத்து சேவை எப்போது?
தூத்துக்குடியில் பெய்த கனமழையால் சேதமடைந்த ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, நெல்லை – திருச்செந்தூர் இடையே இன்று (ஜனவரி 6) ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது.
கடந்த டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
இதனால் திருச்செந்தூர் – நெல்லை இடையேயான ரயில்வே தண்டவாளங்கள் சேதமடைந்தது. குறிப்பாக, டிசம்பர் 17-ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்டதால், திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு சிக்கியிருந்த பயணிகள் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டனர்.
கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக திருச்செந்தூர் – நெல்லை இடையே சேதமடைந்த தண்டவாளங்கள் சீரமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது. இந்தநிலையில், சேதமடைந்த ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் பென்னி தலைமையியான குழுவினர் நெல்லை – திருச்செந்தூர் இடையே ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர்.
அப்போது, தண்டவாளத்தின் உறுதித்தன்மை, சிக்னல் மற்றும் மின் பாதைகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்விற்கு பிறகு இன்று மாலையே செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரிலிருந்து புறப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு: மாட்டுவண்டியில் கண்டுகளிக்கும் மக்கள்!
தயாரிப்பாளர் சங்கத்தை தற்காலிகமாக காப்பாற்றிய கலைஞர் 100 விழா!