ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களை பணியமர்த்த நெல்லை அரசு போக்குவரத்து கழகம் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது. இது போக்குவரத்து தொழிலாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அதன் மேலாண் இயக்குநர் ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு டென்டர்கள் வரவேற்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டர்களை நேற்று (ஜூன் 17) காலை 11 மணி முதல் ஒப்பந்த புள்ளி திருநெல்வேலி, தூத்துக்குடி ரோடு, வி.எம்.சத்திரம் போக்குவரத்து துறை அலுவலகத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்த படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் ஜூலை 18-ம் தேதி என்றும், அன்று காலை 11 மணிக்கு திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக மைய அலுவலகத்தில் வைத்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலும் விபரங்களை தமிழக அரசின் டெண்டர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கூறுகையில், “ 8 ஆண்டுகளுக்கு மேலாக திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர் நியமனம் செய்யப்படவில்லை. தினமும் 300 பேருந்துகள் வரை ஓட்டுநர், நடத்துநர் இல்லாமல் நிறுத்தப்படுகின்றன. 6 மாதத்திற்கு முன்பு இருந்த காலி பணியிட அடிப்படையில் வேலைவாய்ப்புகளில் தனியார் மூலம் நிரப்புவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். ஜூலை 18-ம் தேதி காலை வரை ஒப்பந்த புள்ளிகளை அளிக்கலாம். அன்றே ஒப்பந்த புள்ளிகளில் இறுதி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களை தனியார் வசம் கொடுக்கக் கூடாது என தொடர்ந்து போக்குவரத்து கழக ஊழியர்களின் சங்கங்கள் வலியுறுத்தி போரட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த அறிவிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகத்தில் குறைந்த பால் விலை : எவ்வளவுன்னு தெரிஞ்சுகோங்க!
நீட் தேர்வு குளறுபடி : தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!