திருநெல்வேலி என்று சொன்னாலே அல்வாவும் அருவாவும் தான் பலருக்கு ஞாபகம் வரும். அந்த வகையில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை நெல்லை மற்றும் தூத்துக்குடியில் ஜாதிய மோதலுக்கு பஞ்சம் இல்லை.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு மாதத்தில் 10 கொலைகள் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் பலரும் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.
இந்த கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தபோதும், அடுத்தடுத்து பழிவாங்கும் வகையில் கொலைகள் நடைபெற்ற வண்ணம் இருப்பது பொதுமக்களுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. ஒரு பிரிவை சார்ந்தவர்கள் கைது செய்யப்படும் பொழுது அதன் எதிரொலியாக மீண்டும் ஒரு கொலை அரங்கேறி வருகிறது.
அதனை தடுக்க வேண்டியது காவல்துறை மற்றும் உளவுத்துறையின் முக்கிய கடமையாக உள்ளது. ஆனால் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் உளவுத்துறை என்ன செய்கிறது என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்திருக்கிறது.
மேலும் கொலையில் பலியாவது பெரும்பாலும் தலித் பட்டியல் இனத்தவர்கள், கொலை வழக்கில் கைதாகி சிறை செல்வது ஆதிக்க சாதியினர். இதனையெல்லாம் வெறும் பழிக்கு பழி கொலையாக கருத முடியாது. இதன் பின்னால் ஒரு சாதிய “தீ” சத்தமில்லாமல் புகைந்து கொண்டிருப்பதாகவே மக்கள் கருதுகிறார்கள்.
மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பேட்டை மயிலப்பபுரம் பிச்சையா, சுத்தமல்லி கொம்பையா, மேலவீரராகவபுரம் மகேஸ், மேலநத்தம் மாயாண்டி, வீரவநல்லூர் அருணாச்சலகுமார், கீழ நத்தம் பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜாமணி உட்பட 10 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
காவல்துறை மற்றும் உளவுத்துறை என்ன செய்கிறது ?
இந்த கொலை சம்பவங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, “நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பத்து கொலைகளும் முன்விரோதம் காரணமாகவும், ஜாதிய வன்கொடுமையிலும், ஆணவ படுகொலையாகவும் தான் பார்க்கப்படுகிறது. இதனை தடுக்க உளவு துறைகள் தரக்கூடிய தகவலின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே காவல்துறைகள் உற்சாகமின்மையாகவும் மந்தமாகவும் செயல்பட்டு வருவதாகவே தெரிகிறது. ஒரு கொலை நடந்தால் சம்பவ இடத்திற்கு முதலில் வருவது காவல்துறை தான். அதில் காட்டக்கூடிய வேகத்தை அந்த கொலைகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதில் காட்டினால் சில கொலைகளை தவிர்த்து இருக்கலாம்.
காவல் அதிகாரிகள் பலருக்கு வார விடுமுறை கொடுப்பதில்லை. காலை 8 மணிக்கு பணிக்கு வந்தால் வீட்டிற்கு செல்ல இரவு 2 மணி வரை ஆகிறது. இதனால் மனதளவிலும் உடல் அளவிலும் சோர்ந்து விடுகிறார்கள். இந்த சோர்வு தான் பல வழக்கில் அவர்களை ஏனோதானோ என்று பணியாற்றும் வகையில் மாற்றி விடுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஜாதி ரீதியிலான கொலை நடந்தால் பதற்றமடையும் காவல்துறை, கொலை செய்யப்பட்டவர் தரப்பும், கொலை செய்தவர்கள் தரப்பும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்ததும், எந்த பதற்றமும் இல்லாமல் மிதமாகவே விசாரணையை தொடர்வதாக தெரிகிறது” என்று கூறுகிறார்கள்.
அச்சத்தில் உறைந்திருக்கும் நெல்லை மக்கள்!
திருநெல்வேலியில் நடைபெற்ற கொலை சம்பவங்களால் பலரும் அக்கம் பக்கத்தில் பேச்சு கொடுக்கவே பயந்து விடுமுறை நாட்களில் கூட வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.
இது குறித்து திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது, “திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்களால் மாவட்ட மக்களிடையே ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் சரிவர பணியாற்றவில்லை என்பதையே இது வெளிக்காட்டியுள்ளது. உளவுப்பிரிவு காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறியிருக்கிறார்கள்.
ஒரு குறை நடந்தாலோ ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் மோதல்கள் நடந்தாலோ அதனை தொட்டு அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் ஒரு கொலை நடந்து விடுகிறது. இது தொடர் கதையாக தான் செல்லும் என்பது காவல்துறைக்கும் உளவுத்துறைக்குமே தெரியும். ஆனால் அவர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படவில்லை. ஏன் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
உளவுத்துறையின் நுண்பிரிவில் இடம் பெற்றுள்ள காவல்துறையினர் பல ஆண்டுகளாக வெறுமனே கடமைக்கு பணியாற்றுகிறார்கள். பழிக்குப்பழியாக நடைபெறும் கொலை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை.
கொலை வழக்கில் தேடப்படுவோர் நீதிமன்றங்களில் சரணடையும் நிலையும் உள்ளது. தகவல் அளிக்காமல் உறங்கிப்போன உளவுத்துறை அதிகாரிகள், ஒருவேளை முன்கூட்டியே தகவல் தெரிவித்தாலும் அது குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் தலையாயக் கடமை. திறமையான காவல்துறை அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும்.
மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்று கொலை சம்பவங்கள் நடந்தால் மக்களிடையே அச்ச உணர்வு தலைதூக்கும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது அரசு எடுக்கக்கூடிய கடும் நடவடிக்கையை பொருத்தே இனி கொலை செய்பவர்கள் மட்டுமல்லாமல் கொலை செய்ய நினைப்பவர்களுக்கே ஒரு அச்சம் ஏற்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
நெல்லை சரவணன்
நீட் பயிற்சி நிறுவனங்களின் கைப்பாவையா ஆளுநர்?- சந்தேகம் எழுப்பும் முதல்வர்!
நீட் தோல்வி: மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை!