நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நகை வியாபாரியிடம் இன்று(மே 30) ரூ.1.5 கோடி பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த். நகைக்கடை வைத்திருக்கும் இவர் தனது கடைக்கு தேவையான நகைகளை வாங்குவதற்காக கேரளாவிற்கு காரில் புறப்பட்டுள்ளார்.
நகைகளை வாங்குவதற்காக ரூ.1.5 கோடி பணத்துடன் நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலம் அருகே தனது உதவியாளர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது, இவர்களது காரை பின் தொடர்ந்து இரண்டு கார்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்துள்ளனர்.
காருக்கு முன்னும் பின்னும் வந்த அவர்கள் திடீரென காரை நிறுத்தி, நகை வியாபாரியை தாக்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் இதை பார்த்துள்ளார்.
உடனே பேருந்தை நிறுத்தி கொள்ளையை தடுக்க பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் முயற்சித்து இருக்கிறார்கள்.

இதனால் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் சுஷாந்தை தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டு, அவரது காரையும் கடத்தி சென்று விட்டனர். சிறிது தொலைவு வந்ததும் சுஷாந்தை நடுவழியில் இறக்கிவிட்ட அந்த கும்பல் நாகர்கோவில் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளது.
தொடர்ந்து சென்றால் நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்த கொள்ளையர்கள் சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தை நோக்கி சென்றுள்ளனர்.
அங்குள்ள குளக்கரையில் சுஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த பணத்தை தங்கள் காருக்கு மாற்றிய கொள்ளையர்கள் சுஷாந்தின் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சுஷாந்த் உடனடியாக தனது குடும்பத்தினரிடம் இது குறித்து தகவல் தெரிவித்து விட்டு மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாங்குநேரி டிஎஸ்பி ராஜு தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘வெறித்தனம்’ : கொண்டாடி தீர்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
மதிமுகவிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி