நெல்லை ஜல் நீட் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்த விடுதி, உரிய அனுமதியின்றி இயங்கியதால் இன்று (அக்டோபர் 21) மூடப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் நெல்லையில், ‘ஜல் நீட் அகாடமி’ என்ற கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை சிசிடிவி கேமரா மூலம் பார்த்த ஜலாலுதீன், மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மாணவர்களுக்கு கை, கால் மற்றும் முதுகுப்பகுதியில் ரத்தக்காயம் ஏறப்பட்டுள்ளது.
அதேபோல, பயிற்சி மைய வாசலில் காலணிகளை முறையாக அடுக்காத காரணத்தால், மாணவி ஒருவர் மீது செருப்பை வீசி எறிந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வீடியோ வைரலான நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், அக்டோபர் 18-ஆம் தேதி ஜல் நீட் பயிற்சி மையத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் ஜலாலுதீன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சி மையத்தின் அருகிலேயே தனித்தனி விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து நீட் தேர்வு பயிற்சி மையத்தில் அக்டோபர் 19-ஆம் தேதி சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில், சமூக நலத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் விடுதி இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் விடுதி உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இதனையடுத்து விடுதி கட்டட உரிமையாளர் மாணவர்களை காலி செய்ய சொன்னதால், மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேறினர்.
இருப்பினும் நீட் பயிற்சி மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பயிற்சி மையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீனை காவல்துறையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
16 செல்வங்கள்… 16 குழந்தைகள் : நாடாளுமன்ற தொகுதிகள் குறைவதை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின்
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி கையில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள கைப்பை!