அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 காவல்துறை அதிகாரிகளுக்கும் ஜாமீன் வழங்கி திருநெல்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 15) உத்தரவிட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தும்போது, உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பல்வீர் சிங் உள்பட 15 காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உள்துறை செயலாளர் அமுதா தலைமையில் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்ரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் அமுதா ஆய்வு செய்தார். இந்த விசாரணையை தொடர்ந்து கடந்த மார்ச் 29-ஆம் தேதி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் விசாரணை கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி திரிவேணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 காவல்துறை அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் மகாராஜன் மற்றும் மாடசாமி ஆகியோர் ஆஜராகி,
“ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 காவல்துறை அதிகாரிகளுக்கும் நீதிமன்ற காவல் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்க கூடாது.
பற்களை அகற்ற பல்வீர் சிங் பயன்படுத்தியதாக கூறப்படும் இடுக்கியை கூட சிபிசிஐடி அதிகாரிகள் இன்னும் கைப்பற்றவில்லை” என்ற வாதத்தை முன்வைத்தனர்.
இதனை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 காவல்துறை அதிகாரிகளுக்கும் நீதிபதி திரிவேணி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ED அதிகாரி அங்கித் திவாரியை விஜிலென்ஸ் விசாரிக்க தடையில்லை: மதுரை உயர்நீதிமன்றம்
கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு: எடப்பாடிக்கு சம்மன்!