திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உட்பட இருவர் இன்று (நவம்பர் 18) பலியான சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை எனும் பெண் யானை கோவில் நிர்வாகம் சார்பில் வளர்க்கப்பட்டு வருகிறது. அதனை உதயகுமார் என்ற பாகன் பராமரித்து வருகிறார்.
கோயிலில் வழக்கமாக கட்டிப்போடும் விலாச மண்டபம் அருகே தெய்வானை இன்று கட்டி போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மதியம் 3 மணியளவில் அதற்கு உணவளித்த பாகனையும், அவரது உறவினரான சிசுபாலன் இருவரையும் யானை திடீரென தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், யானையால் மிதிக்கப்பட்ட சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிருக்கு போராடிய பாகன் உதயகுமார் உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
வன அலுவலர் ஆய்வு!
யானை மிதித்து இருவர் பலியானதை அடுத்து மாவட்ட வன அலுவலர் ரேவ்தி ரமணன், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கால்நடை மருத்துவர்களும் யானையை பரிசோதனை செய்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரேவ்தி ரமணன், “பொதுவாக ஆண் யானைக்கு மட்டுமே மதம் பிடிக்கும் நிலையில், பெண் யானையான தெய்வானைக்கு மதம் பிடிக்க வாய்ப்பில்லை” என தெரிவித்தார்.
தொடர்ந்து வனசரக அலுவலர் கவின் கூறுகையில், “பாகனின் உறவினர் சிசுபாலன் இன்று மதியம் யானை தெய்வானை அருகே நீண்ட நேரம் செல்ஃபி எடுத்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த யானை தனது கால் மற்றும் தும்பிக்கையால் சிசுபாலனை தாக்கியுள்ளது. அவரை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தும்பிக்கையால் தூக்கி சுவற்றில் வீசியது. இதில் படுகாயமடைந்த இருவரும் உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
பாகனை கொன்ற இடத்திலேயே சுற்றி வரும் தெய்வானை இன்னும் சாப்பிடாமல் உள்ளது. அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவர வன அலுவலர்கள் 3 நாட்கள் கோவிலில் தங்கி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன காரணமாக இருக்கும்?
இந்த சம்பவம் தொடர்பாக யானைகளுக்கான சிறப்பு நிபுணர் அறிவழகன் புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பொதுவாக ஆண் யானைகளுக்கு மட்டுமே மதம் பிடிக்கும். திருச்செந்தூரில் உள்ளது 25 வயதுடைய தெய்வானை என்ற பெண் யானை. அதற்கு மதம் பிடிக்க வாய்ப்பில்லை.
எனினும் தெய்வானை தாக்கியதற்கு ஒழுங்காக நேரத்திற்கு உணவளிக்காமல் இருந்தது காரணமாக இருக்கலாம்.
கடற்கரை பகுதி என்பதால் யானைக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். அதனை நேரத்திற்கு குளிப்பாட்டாமல் இருந்தாலும் இதுபோன்ற தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோவில் நடை சாத்தப்பட்டது!
இதற்கிடையே யானை தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்ததை அடுத்து திருச்செந்தூர் கோவில் நடை சுமார் 45 நிமிடங்கள் சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா