திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 6-ம் நாளான இன்று (நவம்பர் 7) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
உலக பிரசத்தி பெற்ற இந்த விழாவை காண தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.
லட்சக்கணக்கில் அங்கு திரண்டுள்ள பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் டூ சென்னை ரயில்!
அதன்படி, இன்று (நவம்பர் 7) இரவு 10.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட உள்ள சிறப்பு ரயில், நவம்பர் 8ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
அதேபோன்று திருச்செந்தூர் – திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.
திருச்செந்தூர் – திருச்செந்தூரிலிருந்து இன்று இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரயில் (06732) இரவு 10.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து இன்று இரவு 10.50 மணிக்கு புறப்படும் நவம்பர் 8 நள்ளிரவு 12.10 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்
இந்த ரயில்களில் 9 பொது பெட்டிகளுடன் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திருநெல்வேலி, மதுரை மற்றும் கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகங்கள் சார்பில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய முக்கிய நகரங்களில் சிறப்பு பேருந்துகள் இருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதற்காக www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம்!
சூரசம்ஹார விழா லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ள நிலையில் அவர்களின் வசதிக்காக இன்றும், நாளையும் திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தம் உள்ளிட்டவை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, “தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதேபோல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் ஆறுமுகநேரி DCW ஜங்ஷன், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி உடன்குடி வழியாக செல்லலாம் அல்லது சண்முகபுரம் ரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லலாம்.
குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லலாம்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்லலாம் அல்லது ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், நடுநாலுமூலைக்கிணறு விலக்கு வழியாக காந்திபுரம், ராணிமஹாராஜபுரம் வந்து திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ சந்திப்பு வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லலாம்.
நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி சாலை நல்லூர் ‘V’ சந்திப்பு வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லலாம்.
தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு!
தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லலாம்.
திருநெல்வேலி, குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் திருநெல்வேலி சாலையில் உள்ள ஷபி டிரேடர்ஸ் கீழ்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்பி செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லலாம்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் பரமன்குறிச்சி சாலையில் உள்ள FCI குடோனுக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி திரும்பி செல்லும்போது அதே வழித்தடத்தில் செல்லலாம்.
நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் பரமன்குறிச்சி சாலையில் உள்ள FCI குடோனுக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி திரும்பி செல்லும்போது அதே வழித்தடத்தில் செல்லலாம்.
பக்தர்களின் தனியார் வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம்: பக்தர்கள் தங்கள் வாகனங்களில் போக்குவரத்து நெரிசலின்றி, பாதுகாப்பாக வந்து செல்வதற்கு சில வழிப்பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
20 வாகன நிறுத்துமிடங்கள்!
பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி சாலையில் 6 வாகன நிறுத்துமிடங்களும், திருநெல்வேலி சாலையில் 7 வாகன நிறுத்துமிடங்களும், பரமன்குறிச்சி சாலையில் 3 வாகன நிறுத்துமிடங்களும் மற்றும் திருச்செந்தூர் TB சாலையில் 3 வாகன நிறுத்துமிடங்களும் (Green Pass), பகத்சிங் பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு வாகனம் நிறுத்துமிடமும் சேர்த்து மொத்தம் 20 வாகன நிறுத்துமிடங்கள் (Parking Places) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்… ஏற்பாடுகள் என்னென்ன?
’அமரனின் கமாண்டிங் ஆபிஸரே!’ : 70ஐ தொட்ட கமல்… குவியும் வாழ்த்துகள்!