திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று (பிப்ரவரி 23) கோலாகலமாக நடைபெற்றது.
12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் மாசி திருவிழா பிப்ரவரி 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
9-ஆம் திருநாளான நேற்று காலை மேலக்கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்க பெருமானும் தனித்தனி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தியபின் 8 வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவில் சென்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
முதலில் காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு 7.45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து 7.48 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் – வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
நான்கு ரத வீதிகளை சுற்றிய பின் தேர் மீண்டும் 8.10 மணிக்கு நிலைக்கு வந்தது.
இதனை தொடர்ந்து காலை 8.15 மணிக்கு தெய்வானை அம்மன் தேர் வீதி உலா வந்து காலை 9 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். 11-ஆம் திருநாளான நாளை தெப்ப திருவிழா, 12-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பர உலா நடைபெறும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் விலை குறைந்த தங்கம்… இன்றைய விலை இதுதான்!
போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு: ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்த பகவந்த் மான்