திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன கட்டண உயர்வா? – கோவில் நிர்வாகம் விளக்கம்!

Published On:

| By Selvam

tiruchendur murugan temple clarifies ticket rate increase

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. tiruchendur murugan temple clarifies ticket rate increase

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. சஷ்டியை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 13-ஆம் தேதி துவங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 18-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தநிலையில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதன்படி, சாதாரண நாள்களில் ரூ.100-ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.2000-ஆகவும், ரூ.500-ஆக இருந்த அபிஷேக தரிசன கட்டணம் ரூ.3000-ஆகவும், யாகசாலை உள்ளே அமர்ந்து பார்க்க ரூ.3000 கட்டணம் உயர்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

கோவில் நிர்வாகம் விளக்கம்!

கட்டண உயர்வு குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினசரி பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வருகிறது.

இத்திருக்கோயிலில் ஏற்கனவே பக்தர்கள் தரிசனத்திற்கு இலவச தரிசன வழி, மூத்தகுடிமக்கள் தரிசன வழி, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வழி ரூ.100 ஆகிய கட்டண தரிசன வரிசை மூலம் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் உரிய அனுமதி பெற்று இலட்சக்கணக்கான பக்தர்கள் நலன் கருதி வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக ரூ.1000/- கட்டணத்திற்கான சிறப்பு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சிறப்புபணி புரிவதற்கு இத்துறை அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவின் அடிப்படையில், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வர்கள் ஆகியோர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கண்காணிப்பதற்காக இத்திருக்கோயில் வளாகம் முழுவதும் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ரூ.1000 கட்டண தரிசன வரிசையில் ரசீது வழங்காமல் பணம் மட்டும் பெற்றுக் கொண்டு திருக்கோயிலுக்குள் அனுமதிப்பதாக உண்மைக்கு புறம்பான தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

மேற்படி புகாரில் ரூ.1000 கட்டண தரிசன வரிசையில் பணிபார்க்கும் சிறப்பு அலுவலர் கட்டணச்சீட்டு வழங்குவதை முற்றிலும் மறைத்து, சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குவதை காட்டாமல், உள்நோக்கத்துடன் திருக்கோயில் பணியாளர் பணம் பெறுவதை மட்டும் ஒரு கோணத்தில் வீடியோ எடுத்து தமிழக அரசு மற்றும் திருக்கோயிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திருச்செந்தூரைச்  சேர்ந்த பிருதிவிராஜ், என்பவரால் பொய்யான செய்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அன்னார் மீது இத்திருக்கோயில் நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி விழாவை பொறுக்கமுடியாத சிலர் திட்டமிட்டு இதுபோன்ற சதிவேலைகளில் ஈடுபட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சரின் விளக்கம்!

நவம்பர் 16-ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் திருச்செந்தூர் முருகன் கோவில் கட்டண உயர்வு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “திருச்செந்தூர் கோவிலுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்து சமய அறநிலையத்துறை செய்து கொடுத்து வருகிறது. கந்த சஷ்டி திருவிழாவை பொறுக்கமுடியாத சிலர் திட்டமிட்டு  இதுபோன்ற சதிவேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தவறான வீடியோ வெளியிட்ட நபர் மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு என்பது 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ.500 இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.2000-ஆகவும், ரூ.500 இருந்த அபிஷேக கட்டணம் ரூ.3000-ஆகவும் உயர்த்தினார்கள். கடந்த ஆண்டு வரை ரூ.800 சிறப்பு தரிசன கட்டணம் டிக்கெட் வாங்கப்பட்டது.

இந்த ஆண்டு அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு பொதுமக்கள் கருத்துக்காக அறிவிப்பு செய்யப்பட்டு சட்டதிட்டத்திற்கு உட்பட்டு ரூ.1000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.100 சிறப்பு தரிசன கட்டணம், பொது தரிசனம்  தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆகவே திருச்செந்தூர் கோவிலில் எந்தவிதமான கட்டண உயர்வும் செய்யப்படவில்லை” என்று விளக்களித்துள்ளார்.

 

கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!

தரிசன கட்டணம் தொடர்பாக சிலர் பொய்யான தகவல்களை பரப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 17-ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் குறித்து கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2018-ஆம் ஆண்டு முதல் ஒரே கட்டண நடைமுறை தான் உள்ளது. கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. சிலர் தவறாக மக்களை திசை திருப்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். tiruchendur murugan temple clarifies ticket rate increase

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உண்மை சரிபார்ப்பு குழு அமைத்ததில் என்ன தவறு?: நீதிபதி சரமாரி கேள்வி!

செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!