தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கந்த சஷ்டி விழா உலகப் புகழ் பெற்றது. கந்த சஷ்டி விழாவை ஒட்டி உலகம் எங்கிருந்தும் பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.
அதிலும் குறிப்பாக பல பக்தர்கள் பத்து நாள் கோயிலிலேயே தங்கி சஷ்டி விரதம் அனுசரிப்பார்கள்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், “கந்த சஷ்டி திருவிழாவை யொட்டி பக்தர்கள் கோவில் உள்பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க இந்த ஆண்டு அனுமதி மறுப்பு” என்று ஒரு தகவலை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், “ கந்த சஷ்டி திருவிழாவை யொட்டி பக்தர்கள் கோவில் உள்பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையும் இதில் உடனடியாக தலையிட்டு பாரம்பரியமாகவும் வழக்கமாகவும் நடந்துவரும் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் தங்கி இருந்து விரதத்தை கடைபிடிக்க உரிய அனுமதி தர வேண்டும்” என்று சொல்லியிருந்தார்.
இதுகுறித்து திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகனிடம் கேட்டபோது,
”கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் 10 நாட்கள் தங்கியிருந்து விரதம் இருப்பது வழக்கம்.
இந்த வருடம் பக்தர்கள் தங்கியிருக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தன. அதைத்தொடர்ந்து பாஜக உட்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது உண்மையில்லை.
வழக்கமாக கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள். தற்போது பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு வருகிறது.
அதனால் கிடைக்கும் பொருள்கள் கோயில் பிரகாரத்தில்தான் வைக்கப்படுகிறது.
எனவே, சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக, கட்டிடங்கள் இடிக்கப்படும் இடங்களில் 13 தற்காலிக தங்கும் குடில்கள் அமைக்கப்படுகிறது. அதில் பக்தர்கள் தங்க வைக்கப்படுவார்கள்.
அதில் 13000 முதல் 15000 பக்தர்கள் வரை தங்கலாம். பக்தர்களின் வசதிக்காக தற்காலிகமாக 150 குளியல் அறை மற்றும் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன.
ஏற்கனவே 170 கழிவறைகள் இருக்கின்றன. எனவே வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம், கந்த சஷ்டி விரதம் இருப்பதற்கு எந்த தடையும் இல்லை”என்றார் அருள் முருகன்.
–வேந்தன்
1972 அக்டோபர் 17…. வரலாற்றை மாற்றிய எம்.ஜி.ஆர். எக்ஸ்பிரஸ்!
மாணவி சத்யா கொலை: ரயில் ஓட்டுநரிடம் சிபிசிஐடி விசாரணை!