How to Eat Healthy when Travelling

சண்டே ஸ்பெஷல்: டூர் செல்கிறீர்களா… உணவு விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ!

தமிழகம்

தேர்வுகள் முடிந்து பிள்ளைகளுடன்  சுற்றுலாவுக்குக் கிளம்புகிறீர்களா…  உணவு விஷயத்தில் கவனம் அவசியம். சுற்றுலா என்று வந்துவிட்டால் ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியாது. அதுமட்டுமல்லாமல் நாம் செல்லும் இடத்தில் இருக்கும் முக்கிய உணவுகளையும் சுவைக்க வேண்டும் என்ற விருப்பமும் இருக்கும். பயணத்தின்போது உணவு விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ…

எப்போது சுற்றுலா சென்றாலும் குறைந்தது ஒருவேளை உணவையாவது உங்கள் வீட்டிலேயே சமைத்து எடுத்துச்செல்வது நல்லது. ஒன்றிரண்டு நாள் சுற்றுலா செல்லும்போதே இது சாத்தியப்படும். நீண்ட நாள்கள் பயணம் எனில், ஹோட்டலில்தான் சாப்பிட வேண்டும். இதுபோன்ற சூழலில் பதப்படுத்தப்பட்ட உணவு, காரமான உணவு, எண்ணெயில் பொரிக்கப்படும் உணவுகளைத் தவிர்த்துவிடுவது மிக மிக நல்லது.

சுற்றுலாவின்போது ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் சீக்கிரம் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக… பரோட்டா, ஷவர்மா, பிரியாணி போன்ற உணவுகளைத் தவிர்த்து, இட்லி, இடியாப்பம், தோசை, சப்பாத்தி, தயிர்சாதம் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

பயணத்தின்போது வழியில் ஆங்காங்கே இறங்கி, டீக்கடைகளில் வடை, போண்டா, முறுக்கு போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்த்து பட்டாணி, வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை உண்ணலாம்.

சுற்றுலாவின்போது மிக்சர், முறுக்கு, சிப்ஸ் ஆகியவற்றைத் தவிர்த்து கடலை மாவு லட்டு, பாசிப்பருப்பு லட்டு, ராகி லட்டு, மக்கானா (தாமரை விதை), ஓட்ஸ் பால்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு போன்றவற்றைக் கொண்டு செல்லலாம். பழங்களைத் துண்டுகளாக்கி, ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு எடுத்துச்செல்லலாம். இத்துடன் முளைகட்டிய பயறு, காய்ந்த தேங்காய் மற்றும் பொரிகடலை அல்லது அவல் போட்டுக் கலந்து ஸ்நாக்ஸாக எடுத்துச் செல்லலாம். சுற்றுலாவின் முதல் நாளுக்கு ஸ்நாக்ஸாக உலர் பழங்கள், விதைகள், வெள்ளரிக்காய், நுங்கு, அவித்த முட்டை (ஓடு உடைக்காமல்) எடுத்துச்செல்லலாம். என்ன ஸ்நாக்ஸ் இருந்தாலும் அவசரத்துக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டை கைவசம் வைத்திருங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் பாக்கெட் உணவுகள், பதப்படுத்திய உணவுகள், பிளாஸ்டிக் பைகளில் அடைத்த உணவுகளைச் சாப்பிடாதீர்கள். கார்பனேட்டடு குளிர்பானங்கள் வேண்டவே வேண்டாம். கடைகளில் பழங்கள் சாப்பிட விரும்பினால், ஏற்கெனவே வெட்டி வைத்த பழங்களைத் தவிர்த்து, கண்முன்னே பழங்களை ஃப்ரெஷ்ஷாக வெட்டித் தரச்சொல்லி சாப்பிடலாம். பாட்டிலில் அடைத்த இளநீர், ஜூஸ் போன்றவற்றைத் தவிருங்கள்.

நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் ஒரே மாதிரி இருக்கும் என்று கூற முடியாது. முடிந்தளவுக்கு வீட்டில் இருந்தே தண்ணீர் கொண்டு செல்லுங்கள். அப்படி முடியாத பட்சத்தில் சீல் வைக்கப்பட்ட வாட்டர் பாட்டில்களை வாங்கிப் பயன்படுத்தலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க முடியாது என்பதற்காக சிலர், பயணத்தின் போது தண்ணீரே குடிக்க மாட்டார்கள். இது உடலை வறட்சி அடையச் செய்யும்.எனவே, போதுமான அளவு தண்ணீர் குடித்து, பயண வழியில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மோர், இளநீர், பதநீர் போன்றவை உங்கள் உடலுக்குக் கூடுதல் ஆற்றல் தந்து குளிர்ச்சியாக வைத்திருக்கும். பயணத்தை என்ஜாய் செய்ய உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் கவனமாக இருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: தால் இட்லி

கிச்சன் கீர்த்தனா: பெரிய நெல்லி சட்னி

IPL 2024 : மீண்டும் போராடி தோற்ற பஞ்சாப்… த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

ரோடு ஷோக்கு இத பண்ணலாமோ? : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *