திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்தக் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதிகனமழையின் காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு கால நீட்டிப்பு செய்துள்ளது மின்சாரத் துறை.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்தக் கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1. மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
2. ஏற்கனவே, மேற்படி மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 18.12.2023 அன்று அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்.
3. இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நாளை எந்தெந்த மாவட்டங்களில் பொது விடுமுறை?: எங்கெங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?
ஊர் திருவிழாவை கொண்டாடும் ’லால் சலாம்’ பர்ஸ்ட் சிங்கிள்!