காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 பேர்! மீட்பு!

தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் செல்லும் காவிரி ஆற்றில் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மேட்டூர் அணை இன்று (ஜூலை 16) காலை அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீரின் வரத்தை, அப்படியே அணையின் பாதுகாப்பு கருதி வெளியேற்றி வருகிறார்கள். தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த தண்ணீரைப் பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மேட்டூர் அணையின் புதிய பாலத்தில் நின்று பார்த்து ரசித்து வருகின்றனர். அதேநேரத்தில், மேட்டூர் அணையின் உபரிநீர் தொடர்ந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை 50 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட உபரி நீர், பிற்பகலில் 70 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. பின்னர், 92 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்ட உபரிநீர், மாலை 4 மணி நேரப்படி 1 லட்சத்து 13 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட உபரிநீரால், காவிரிக்கரை பகுதி மக்களுக்கு நேற்று (ஜூலை 15) முதல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாதுகாப்புக்காக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று பிற்பகல் தாரமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான கவின், பிரபு, தினேஷ் ஆகிய 3 பேர் அனல்மின் சாலையில் உள்ள காவிரியாற்றில் சீறிவரும் தண்ணீரைப் பார்த்து ரசித்ததுடன், அதனருகில் சென்று செல்பி எடுக்கவும் நினைத்தனர். இதையடுத்து, தண்ணீர் குறைவாக வந்தபோது ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்ற அவர்கள், செல்பி எடுத்தனர். ஆனால், போகப்போக உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டதையடுத்து, காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்த மூவரும் வெள்ளப்பெருக்கில் சிக்கிகொண்டனர். இதனையறிந்த தீயணைப்புப் படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி அவர்களை மீட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட மூவரும் தண்ணீரில் சிக்கியதன் காரணமாக, அவர்கள் ஒருவித பயத்தில் இருந்ததையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *