மிரட்டல் பேச்சு: மன்னிப்பு கேட்ட கர்னல் பாண்டியன்

Published On:

| By Jegadeesh

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் பாஜக சார்பில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் , தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ராணுவத்தில் பணியாற்றிய தங்களை போன்றவர்களுக்கு வெடிகுண்டு வைக்கத் தெரியும். துப்பாக்கி சுடுவதிலும், சண்டை போடுவதிலும் நாங்கள் கெட்டிக்காரர்கள். இதை எல்லாம் செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு அவர் மிரட்டல் விடுத்து பேசினார்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கர்னல் பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (மார்ச் 27 ) விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் பாண்டியன் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார்.

மனுதாரர் சார்பில், இதுபோல் மிரட்டல் விடுக்கும் விதமாக இனி பேச மாட்டேன் என்று மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இனி இதுபோல் பேச மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பாண்டியன், இனி இதுபோல் பேச மாட்டேன் என்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

இதையடுத்து ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து திருவல்லிகேணி போலீசில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்!

கே. டி. ராகவனை நலம் விசாரித்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel