சென்னை ரிச்சி தெருவில் யூடியூபரை மிரட்டி கேமராவை பிடுங்கிய விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல யூடியூபரான நந்தகுமார் கடந்த ஜூலை 6ஆம் தேதி சென்னை ரிச்சி தெருவுக்கு சென்றார். A2Dyoutube என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் இவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
மொபைல், லேப்டாப் என எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் குறித்து வீடியோ வெளியிட்டு வரும் நந்தகுமார் அன்றைய தினமும் ஐபோன் பேட்டரி குறித்து வீடியோ எடுத்துக்கொண்டு ரிச்சி ஸ்ட்ரீட்டில் சென்று கொண்டிருந்தார்.
மிகப்பெரிய எலெக்ட்ரானிக் சந்தை அமைந்துள்ள ரிச்சி தெருவில் அவர் தனது நண்பர்களுடன் கேமராவை கையில் வைத்துக்கொண்டு சென்ற போது, அவர் பின்னால் வந்த ஒருவர் தகாத வார்த்தையில் பேசியதோடு, நான் ஒரு ரவுடி என்று கூறியுள்ளார்.
நான் ம்… என்று சொன்னால் போதும், அனைவரும் வந்து விடுவார்கள்.. எனக்கூறி ஆட்டோ ஒன்றின் அருகில் அழைத்துச் சென்றார்.
கேமராவை நான் எடுத்து வருகிறேன் என்று நந்தகுமார் கூற, இல்லை என்னிடம் கொடு என்று கேட்டுள்ளார்.
அந்த ஆட்டோவில் மேலும் சிலர் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் நந்தகுமாரை மிரட்டி கேமராவை பறித்துக் கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோவை நந்தகுமார் தனது யூடியூப் சேனலிலும் வெளியிட்டுள்ளார்.
இனிமேல் ரிச்சி ஸ்ட்ரீட் பக்கமே வரமாட்டேன் என்று சொல்லும் அவர், “இதுதொடர்பாக நாங்கள் புகார் ஏதும் கொடுக்கவில்லை. அவர்கள் எல்லாம் கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்கள், கையில் ஆயுதம் வைத்திருப்பார்கள் என்கிறார்கள். புகார் கொடுத்து நம்மை எதாவது செய்துவிட்டால் என்ன செய்வது. என்னதான் இருந்தாலும் உயிர் முக்கியம் தானே. எப்படியோ தப்பித்து வந்துவிட்டேன்.
போதை பொருள் பழக்கத்தால் பலர் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறுகிறார்.
யூடியூபர் @A2D_Army நந்தா அவர்களுக்கு நடந்த சம்பவம்
சென்னையில் மிகவும் பரபரப்பான Ritchie Street-ல் பட்டபகலில் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களை இப்படி மிரட்டும் தைரியம் எப்படி வருகிறது ? @chennaipolice_ @CMOTamilnadu pic.twitter.com/LKZUXfMimi
— Deepan Chakkravarthi (@deepanpolitics) July 7, 2024
இந்த வீடியோவை யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சென்னை காவல்துறையையும், தமிழ்நாடு முதல்வரையும் டேக் செய்திருந்தார்.
அவரது பதிவில், “இந்த சம்பவம் நடந்த 100 மீட்டர் தொலைவில் தான் ஒரு காவல் உதவி மையம் உள்ளது. அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததால் எதுவும் பேச இயலாமல், அந்த பகுதியை சேர்ந்த மற்றொருவர் சமாளித்து கேமராவை திரும்ப வாங்கி கொடுத்திருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு சென்னை காவல்துறை, “தகுந்த நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று ட்வீட் செய்திருந்தது.
இந்நிலையில் யூடியூபர் நந்தக்குமாரை மிரட்டியது பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
’வேங்கைவயல்.. 2 ஆண்டுகள் ஆகியும் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?’ : உயர்நீதிமன்றம் கேள்வி!
சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்!