தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 31) ஆதிக்க சாதியினர் மூவர் கூட்டாக சேர்ந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்த சம்பவத்தால், அங்கு சாதி கலவரம் ஏற்படும் சூழல் நிலவுவதாக காவல்துறையினர் சொல்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் முத்துபெருமாள் (27).
இவர் நேற்று (டிசம்பர் 31) காலை பெருமாள்புரத்தில் இருந்து குன்னங்குளம் நோக்கி தனது டூ வீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, குன்னங்குளம் அருகே மூன்று இளைஞர்கள் முத்துப்பெருமாளை வழி மறித்து, அவரது கைகள், முகம், தலை என உடல் முழுவதும் கொடூரமான முறையில் வெட்டி சிதைத்துள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே முத்துபெருமாள் உயிரிழந்தார்.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாள்புரம் காவல்துறையினர், முத்துபெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், முத்துப்பெருமாளை அரிவாளால் தாக்கி கொலை செய்தது, தெற்கு காரசேரி பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதியினர் இசக்கிபாண்டி, முத்துகிருஷ்ணன், காட்டான் என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக முத்துப்பெருமாள், தெற்கு காரசேரி பகுதியில் டூ வீலரில் வேகமாக சென்றுள்ளார்.
அப்போது இசக்கிபாண்டி மற்றும் அவரது நண்பர்களான முத்துகிருஷ்ணன், காட்டான் ஆகிய மூவரும் முத்துபெருமாளை வழி மறித்து, “ஊருக்குள்ள இப்படி தான் வேகமா போவியா? இனிமே இந்த பக்கம் வந்தா தொலைச்சிக்கட்டிருவோம்” என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பின்னணியில் தான் முத்துப்பெருமாள் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த கொலை சம்பவத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பதட்டமான சூழல் நிலவுவதாக சொல்கிறார்கள் காவல்துறையினர். பழிக்குப் பழியாக வேறு ஏதேனும் கொலை சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருச்சி வரும் மோடி: ஒரே விமானத்தில் பயணிக்கும் முக்கியப் புள்ளிகள்!
கருப்பு நிறத்தில் முதல்வர் கான்வாய்!