தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வெள்ள நீர் புகுந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் 14 நாட்களுக்குப் பின் தற்போது ஐந்தாவது அலகில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையம் தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து யூனிட்களில் இருந்து சுமார் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 17 மற்றும் 18ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களில் பெய்த கனமழை காரணமாக, மின் நிலைய வளாகத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது.
இதைத் தொடர்ந்து மின் நிலையத்தில் உள்ள ஐந்து யூனிட்களிலும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வந்ததது. அதுபோல் மின் உற்பத்தியை தொடங்குவதற்காக அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தன.
18ஆம் தேதியில் இருந்து ஐந்து மின் உற்பத்தி யூனிட்டுகளும் இயங்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது 14 நாட்களுக்கு பின்னர் ஐந்தாவது யூனிட் மட்டும் சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது. இதில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. மற்ற நான்கு யூனிட்களையும் சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : தொடைக்கறிக் குழம்பு