தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர், ஐஜி உட்பட 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் மாணவி ஸ்னோலின் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் கடந்த மே 18ம் தேதி 5 தொகுப்புகள் அடங்கிய 3000 பக்கங்கள் கொண்ட அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அறிக்கையில் உள்ள முக்கிய தகவல்கள்!
- எவ்விதமான தூண்டலும் இன்றி ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அறவழியில் போராட்டம் நடத்திய நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
- போராட்டத்தை கலைக்கும் விதமாக தடியடி, கண்ணீர் புகைவீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் போன்ற எவ்வித முன்னெச்செரிக்கை நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளவில்லை.
- தொலைவில் இருந்து குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கிகளை பயன்படுத்தி, போராட்டம் நடத்தியவர்கள் மீது ஒளிந்து கொண்டு போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை குருவிகளை சுடுவது போல் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்

- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் பின் தலை வழியே துப்பாக்கி குண்டுகள் ஊடுருவி, நெற்றி வழியாக வந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டதன் மூலம் அம்பலமாகி உள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரில் 6 பேர் பின்னந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
- இந்த தாக்குதலில் 13 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்ட நிலையில், எந்த ஒரு போலீஸ்காரருக்கும் படுகாயம் ஏற்படவில்லை.
- வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுக்கவே துப்பாக்கிச் சூடு என்ற போலீசாரின் வாதத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை.
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலீசார் தங்களின் வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்றும், இது குரூரமான செயல் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
- இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமாக அப்போது தென்மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டிஐஜியாக இருந்த கபில்குமார் சர்கார், மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் ஆகியோர் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குறிப்பாக ஆட்சியர் வெங்கடேஷ் தனது பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டு அலட்சியத்துடன் கோவில்பட்டியில் இருந்துள்ளார். அவர் உயர் அதிகாரிகளுடன் எவ்வித ஆலோசனையும் இன்றி துப்பாக்கிச் சூடு முடிவுகளை எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
- மேலும் தூத்துக்குடி எஸ்பியாக இருந்த மகேந்திரன், டிஎஸ்பியாக இருந்த லிங்க திருமாறன், 3 ஆய்வாளர்கள் 2 உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் மற்றும் 7 காவலர்கள் என மொத்தம் 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது

இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீது தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
தூத்துக்குடி துப்பாக்கி சூடு… 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை!