”இது மகளிருக்கான அரசே கிடையாது”: குண்டுக்கட்டாக கைது… செவிலியர்கள் ஆதங்கம்!

Published On:

| By christopher

திமுகவின் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் எம்ஆர்பி தேர்வெழுதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், புதிய 11 மருத்துவமனைகளில் 2-ம் கட்ட செவிலியர் பணிகளை நிரப்பிட வேண்டும், கொரோனா காலக் கட்டத்தில் காலமுறை ஊதியத்தில் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிவரையறை செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தின் முன்பு இன்று காலை (அக்டோபர் 10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்,  செவிலியர்களை குண்டுகட்டாக கைது செய்த காவல்துறையினர் அவர்களை தி.நகர், கோடம்பாக்கம் என சென்னை நகரில் உள்ள 5 மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் நமது மின்னம்பலம் சார்பில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, மண்டபங்களில் அடைக்கப்பட்ட செவிலியர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தோம்.

அவர்கள் கூறியவற்றில் சிலபேரின் கருத்துகளை இங்கு பதிவு செய்கிறோம்.

கூலி வேலைக்கு போகலாம்…

தனியார் துறையில் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நான் வேலை பார்த்தேன். பின்னர் எம்.ஆர்.பி தேர்வெழுதி அரசு வேலையில் சேர்ந்தேன். ஆனால் எனக்கு வெறும் 7 ஆயிரம் ரூபாய் சம்பளம் தான் கிடைக்கிறது. ஒருநாளைக்கு 15 மணி நேரம் வேலை பார்க்கிறேன். இதையெல்லாம் நினைக்கும் போது எதற்கு இந்த வேலைக்கு வந்தோம் என்று தோன்றுகிறது. இதற்கு கூலி வேலை செய்தால் கூட பிழைத்து கொள்ளலாம் போல…

இது எப்படி நியாயம்…?

என் கூட வேலை செய்யும் அரசு ஊதியம் பெறும் செவிலியர்களும் நாங்கள் பார்க்கும் அதே மருத்துவமனை, அதே நேரம், அதே பணி தான் செய்கின்றனர். ஆனால் சம்பளம் மட்டும் எங்களுக்கு மிக மிக குறைவாக வழங்குகின்றனர். இது எப்படி நியாயமாகும்…?

அன்று பூக்கள்… இன்று குப்பை!

இரண்டு வருடத்தில் நிரந்தர அரசு வேலையில் சேர்க்கப்படுவீர்கள் என்று கூறிதான் வேலைக்கு எடுத்தார்கள். ஆனால் இதுவரை எங்களுடைய எந்த கோரிக்கையையும் அரசு நிறைவேற்றவில்லை. கடந்த செவிலியர் தினத்தில் ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் எல்லாம் தூவினார்கள். ஆனால் இன்று குப்பையை விடவும் மோசமாக எங்களை நடத்தியுள்ளார்கள். மொத்தத்தில் இது மகளிருக்கான அரசே கிடையாது…

ஆண் காவலர்கள் எப்படி கைது செய்ய முடியும்?

காலையில் அமைதியான வழியில் போராடிய எங்களை தரதரவென இழுத்து கைது செய்தார்கள். ஆண் காவலர்கள் எப்படி பெண் செவிலியர்களை கைது செய்ய முடியும்? ஒரு செவிலியரின் தாலியை இப்போது காணோம்.. பணி நிரந்தம் செய்ய முடியாவிட்டால் எதற்கு ஒரே நாளில் 7,500 பேரை வேலைக்கு எடுக்கிறார்கள்..?

இன்றைக்கு நடந்ததை என்றுமே மறக்க முடியாது!

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் முதல் இப்போது வரை கான்ட்ராக்ட் அடிப்படையில் தான் வேலை செய்து வருகிறோம். 2 வருடம் என்று கூறினார்கள். ஆனால் 9 ஆண்டுகள் ஆகியும் அதே நிலையில் தான் உள்ளோம். இதுவரை அரசு சார்பில் யாருமே பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள். செவிலியர்கள் என்றால் இப்படி தான் செய்வார்களா? இன்றைக்கு டி.எம்.எஸ் அலுவலகத்தில் போலீசாரால் நிகழ்த்தப்பட்ட அராஜகங்கள் அனைத்தும் எங்களால் என்றுமே மறக்க முடியாது…

இதுபோன்று பல்வேறு செவிலியர்களும் தங்களது கோரிக்கையையும், வலியையும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினர். அதனை கீழே பதிவிட்டுள்ள ???? இந்த வீடியோவில் காணலாம்….

கண்களை மூடிக்கொண்டாரா Stalin? கண்ணீர் வடிக்கும் செவிலியர்கள்... | Nurse Protest | MKStalin | DMK

நேர்காணல்: கிட்டு

தொகுப்பு: கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

VIVO Pro Kabaddi ஏலம்: மீண்டும் பவன் ஷெராவத் புதிய வரலாறு!

டிஜிட்டல் திண்ணை: பாஜகவின் எதிரி யார்? சந்தோஷ் சொன்ன டெல்லி மெசேஜ்! அண்ணாமலை ஷாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment