திருவாரூர் ஆழித்தேரோட்டம்: கோலாகலமாக துவங்கியது!
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழி தேரோட்டம் இன்று (ஏப்ரல் 1) காலை 7.30 மணிக்கு கோலாகலமாக துவங்கியது.
தமிழகத்தில் உள்ள சைவ கோயில்களில் பிரசித்தி பெற்றது திருவாரூர் தியாகராஜர் கோயிலாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இங்கு ஆழித்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். 96 அடி உயரமும் 360 டன் எடையுமுள்ள ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகும். ஆழித்தேரில் வடம் பிடித்தால் கைலாயத்திலும் வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு வசதிக்காக 1,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திருவாரூரில் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான, பேருந்து வசதி, கழிப்பிடம், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் போன்ற அடிப்படை வசதிகளை திருவாரூர் நகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது.
காலை 5 மணிக்கு விநாயகர், முருகன் தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு ஆழித்தேரானது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்து மாலை கோவிலை வந்தடையும். தேரோட்டத்தை பார்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர். அரூரா தியாகேசா முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஐபிஎல் 2023: முதல் போட்டியில் சறுக்கிய சிஎஸ்கே!