திருவண்ணாமலை : ‘மக்கள் வாழ்வதற்கு தகுதியான இடம் இல்லை’ – ஐஐடி பேராசிரியர் குழு!
திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடம் மக்கள் வாழ்வதற்கு தகுதியான இடம் இல்லை என்று ஐஐடி பேராசிரியர் குழு இன்று (டிசம்பர் 3) அம்மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளது.
கனமழையால் திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட பாறை மற்றும் மண் சரிவில், அதன் அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் உள்ள வீட்டின் மீது கடந்த 1ஆம் தேதி சுமார் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு வந்து விழுந்தது.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கவுதம், மகள் இனியா மற்றும் உறவுக்கார சிறுமிகள் மகா, ரம்யா, வினோதினி ஆகியோர் சிக்கினர்.
அவர்களை உயிருடன் மீட்கும் முயற்சியில் தேசிய, மாநில பேரிடர் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தேடும் பணி தொடர்ந்த நிலையில், ஒரு சிறுவன், சிறுமி உட்பட நேற்று இரவு வரை மண்ணில் புதையுண்ட 5 பேரின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை மீதமுள்ள 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கிடையே திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் – உதயநிதி
நிலச்சரிவு நடைபெற்ற இடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு 10 மணியளவில் பார்வையிட்டு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், சென்னை ஐஐடியில் இருந்து மண் ஆராய்ச்சிக் குழு நாளை காலை இங்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்றும், மண் சரிவைத் தொடர்ந்து அரசு எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
பேராசிரியர் குழு ஆய்வு!
அதன்படி சென்னை ஐஐடியில் சிவில் பொறியியல் துறையில் பேராசியர்களாக பணிபுரியும் மோகன், பூமிநாதன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் திருவண்ணாமலை நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.
இதில் பேராசிரியர் மோகன், சிவில் இன்ஜினியரிங் துறையின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளப் பொறியியல் பிரிவுத் தலைவராக உள்ளார்.
டாக்டர் ஏ.பூமிநாதன் தற்போது ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறையின் புவி தொழில்நுட்ப பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆய்வின் முடிவில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்ததில் மக்கள் வாழ்வதற்கு தகுதியான இடம் இல்லை என்று ஐஐடி பேராசிரியர் குழு அம்மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட 2 முக்கிய காரணங்கள்!
இதற்கிடையே சென்னை ஐஐடி பேராசிரியர்கள் குழு செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், “நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கியமாக 2 காரணங்கள் உள்ளன. ஒன்று ஒரே நேரத்தில் அதிகளவிலான மழை பெய்வதால் ஏற்படும். இரண்டாவது, மலை பகுதியில் மழை அதிகமாக பெய்யும் போது வேகம் இருக்கும். அது கீழே போய் அரிப்பு ஏற்பட்டு அதுவே நிலச்சரிவு ஏற்படுத்தி சென்று விடும்.
திருவண்ணாமலையில் பொதுவாக இந்தளவுக்கு மழை இருக்காது. ஆனால் தற்போது அதிகளவிலான மழை ஒரே இடத்தில் பெய்துள்ளது. இது தொடர்பாக விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு அரசிடம் விரிவான அறிக்கை தரப்படும்.
இது போன்ற மலைப்பகுதிகளில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீடு கட்ட முடியும். ஆனால் அதற்கு அதிக செலவுகள் ஏற்படும். அதற்கு பதிலாக வேறோரு நல்ல இடத்தில் நிலையான நிலப்பரப்பில் வீடுகள் கட்டுவது நல்லது.
போர் போடுவது போன்ற காரணங்களால் நிலச்சரிவு ஏற்படாது. இது போன்று மழை பெய்வது தொடர்ந்தால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும்.
மேலிருந்து பாறைகள் அனைத்தும் சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனை அகற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை செய்து வருகிறோம். வெடி வைத்து தகர்க்காமல், ரசாயனம் கலந்த முறையில் பாறைகளை வெடிக்க வைத்து அகற்றலாம். அப்படி என்றால் மற்ற யாருக்கும் பாதிப்பு வராது” இவ்வாறு அவர்கள் கூறினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வெள்ள பாதிப்பு நிவாரணம்: முழு விவரம்!
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு : என்ன நடந்தது?