திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நள்ளிரவில் திருவண்ணாமலையில் உள்ள 4 ஏடிஎம் களில் ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையடித்த பிறகு கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரங்களை தீ வைத்து எரித்து விட்டுச் சென்றனர்.
ஒரே இரவில் 4 ஏடிஎம் களில் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
400 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவர்கள் கொள்ளையடித்து விட்டுத் தப்பி சென்றது, அவர்களது வண்டியின் எண்ணைக் கொண்டு விசாரணையைத் தொடங்கிய போலீசார் கர்நாடகா, குஜராத், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 பேரிடம் விசாரணை நடத்தினர்.
திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவத்தில் ஏடிஎம் தொழில்நுட்பம் தெரிந்த 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.
குறிப்பாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மேவாட் கொள்ளையர்களே நிகழ்த்தியிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஹரியானாவிற்கு சென்ற தனிப்படை போலீசார் கொள்ளை கும்பல் தலைவனான முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகியோரை பிப்ரவரி 17 ஆம் தேதி கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அவர்களிடம் இருந்து 3 லட்சம் பணம் மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு பாஷா, அப்சர் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நிஜாமுதீனை சென்னையில் இன்று (மார்ச் 2) தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட 6 வடமாநிலத்தவர்களில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
மோனிஷா
மெஸ்ஸி ஆர்டர் செய்த ’கோல்ட் ஐபோன்ஸ்’: இணையத்தில் வைரல்!
தேர்தல் ஆணையரை நியமிக்க புதிய விதிமுறை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!