திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்துள்ளார்.
திருத்தணி தெக்கலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி சரளா திருவள்ளூர் மாவட்டம் கிழச்சேரி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். பள்ளிக்கு சொந்தமான செயின்ட்-ஆன்ஸ் ஹோம் ஃபார் சில்ட்ரன் என்ற விடுதியில்தங்கி படித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று விடுதியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் மாணவியின் பெற்றோருக்கு, “காலை தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது பூச்சி கடித்து இறந்துவிட்டார்” என்று தொலைபேசி மூலம் பள்ளியில் இருந்து தகவல் வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
மாணவி மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு அல்லது இன்று ( ஜூலை 25 ) அதிகாலை தற்கொலை செய்திருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தெக்கலூரில் உறவினர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் ,‘தங்கள் மகள் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொள்ள வாய்ப்பில்லை. எனவே, மகளின் மரணம் குறித்து முறையாக விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்’ என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவியின் உடல் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸின் உத்தரவின் பேரில் சம்பவம் நடந்த பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான போலீசார் பள்ளிக்கு முன்பும், மாணவியின் ஊரிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் டிஐஜி சத்யபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. செபாஸ் கல்யாண், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவியின் மரணத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்துகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் ஏற்படுத்திய தாக்கம் தமிழகத்தில் இன்னும் குறையாத நிலையில் தற்போது திருவள்ளூர் மாணவி மரண விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா