திருப்பரங்குன்றம் விவகாரத்துக்காக சென்னையில் யாத்திரையா?: உயர் நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Kavi

திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Thiruparankundram issue High Court question

பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ் யுவராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று இஸ்லாமியர்கள் எந்த வித அடிப்படையும் இல்லாமல் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை வேல் யாத்திரை நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தேன். இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே, பிப்ரவரி 18 ம் தேதி வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (பிப்ரவரி 12)நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜரானார்.

அவர், “ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம் என்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதலில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்து முன்ணணி சார்பில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், போராட்டத்தின் போது மத கலவரங்களை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது என்று நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, பொது அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர். எனவே அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

“மனுதாரர் யாத்திரை செல்வதற்கு கேட்கக்கூடிய பாதை மிகவும் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை ஆகும்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “1931ம் ஆண்டே மதுரை சப் கோர்ட், ”நெல்லித்தோப்பு, சிக்கந்தர் தர்கா, கொடிமரம், மலையேறும் வழிப்பாதை ஆகியவை இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என தீர்ப்பளித்தது. அதன் பின்னர் ப்ரிவியூ கவுன்சில் வரை சென்று மதுரை சப் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

எனவே இஸ்லாமியர்கள் அவர்களுடைய இடத்தில் வேண்டுதலுக்காக ஆடு கோழி பலியிட்டு படைத்து உண்ணுவது இதுவரை வழக்கமாக உள்ளது என அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரித்து ஆர்.டி.ஓ அறிக்கை கொடுத்தார். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவரும் இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளதை அரசுக்கு தெரிவித்தார்” என குறிப்பிட்டார்.

மேலும் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள எந்தெந்த கோயில்களில் ஆடு, கோழிகளில் பலியிடப்படுகின்றன என்று பட்டியலிட்டார்.

மேலூர் வட்டம், அழகர் கோயில், 18ம்படி கருப்பச்சாமி திருக்கோயில்,

மதுரை கிழக்கு வட்டம், பாண்டிமுனிஸீவரர் கோயில்,

வளையாங்குளம் மலையாண்டி கருப்பச்சாமி திருக்கோயில்

கிராமங்களில் உள்ள எல்லை காவல் தெய்வங்கள் கோயில்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அவர், “மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் என்ற பெயரில் பிராணிகளை பலியிட்டு தர்காவில் சமபந்தி விருந்திற்கு அழைப்பு விடுப்பது போன்று சில சமூக விரோதிகள் பொய்யான தகவலை பரப்பினர். இதுதொடர்பாக மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூகங்களிடையே நிலவும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்தில் சமூக விரோதிகள் இதுபோன்று செய்திருக்கின்றனர்.

காலம் காலமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லீம், ஜெயின் என மத வேறுபாடு இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதர சகோதரிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

இந்து முஸ்லீம் உறவு Thiruparankundram issue High Court question

 Thiruparankundram issue High Court question

தமிழ்நாட்டில் கோயில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரை, மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற புனித தலம் என்று தெரிவித்த அரசு வழக்கறிஞர், பல்வேறு நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டினார்.

“கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள சுல்தான் அலாவுதீன் தர்காவில் இந்து மதத்தை சேர்ந்த செங்குன்ற முதலியார் சமூக மக்களால் வழங்கப்படும் கொடிதான் இன்று வரை ஏற்றப்படுகிறது.
காரைக்குடியில் உள்ள ஒரு இந்து கோயில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லீம் மதத்தினர் சீர்வரிசை, நன்கொடை வழங்கினர்.

முஸ்லீம் சமுதாயத்தினர் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடி ஏறக்குறைய ஆயிரம் இந்து சமுதாயத்திற்கு அன்னதானம் வழங்கினர்.

திருப்பூர் ஒத்தப்பாளையம் கிராமத்தில் ஒரு விநாயகர் கோயில் அமைக்க முஸ்லீம் சமுதாயத்தினர் 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியதோடு அக்கோயில் குடமுழுக்கு விழாவில் இரு சமுதாயத்தினரும் ஒன்றாக இணைந்து சிறப்பாக நடத்தினர்.

நாகூர் தர்கா கந்தூரி விழாவில் போத்தப்படுகிற போர்வை பழனியாண்டி பிள்ளை பரம்பரையிலிருந்து தான் இன்று வரை வழங்கப்படுகிறது.

இவ்வாறு தமிழ்நாடு என்றும் மத நல்லிணத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் பெயர்பெற்றது” என்று கூறினார்.

மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று கூறிய அவர், “மத வேறுபாடின்றி மக்கள் ஒரே சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில் மனுதாரர் கோரியவாறு பிப்ரவரி 18ஆம் தேதி யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை ஏற்படுத்தும்” என வாதங்களை முன்வைத்தார்.

இதை கேட்ட நீதிபதி, “யாத்திரை நடத்த அனுமதி கேட்கப்பட்டிருக்கும் இடம் கூட்ட நெரிசல் மிகுந்தது. திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்?
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் எனவும் கண்டனம் தெரிவித்தார்.

வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். Thiruparankundram issue High Court question

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share