சென்னை: கடல்நீரைக் குடிநீராக்கும் மூன்றாவது ஆலை பணிகள் ஆரம்பம்!

Published On:

| By Kavi

சென்னையின் குடிநீர் தேவையை மேலும் பூர்த்தி செய்யும் வகையில் நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் மூன்றாவது ஆலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலை கடந்த 2013ஆம் ஆண்டு பத்து கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது.

இங்கிருந்து திருவான்மியூர், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் தற்போது ஓரளவு குடிநீர் பிரச்சினை குறைந்தது.

இதைத்தொடர்ந்து சென்னையின் குடிநீர் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் இரண்டாவது ஆலை கட்ட முடிவு செய்யப்பட்டது.

ரூ.1,260 கோடி செலவில், 15 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டாவது புதிய ஆலை கட்டுமான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

தற்போது இரண்டாவது ஆலை கட்டுமான பணிகள் 85 சதவிகிதம் முடிந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இரண்டாவது ஆலை பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

Third Nemmeli Seawater Desalination Plant

இந்த நிலையில் வரும் ஆண்டுகளில் சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்,

ஜப்பான் நாட்டு பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுடன் இணைந்து நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நவீன மூன்றாவது ஆலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அந்தப் பகுதியில் தற்காலிக அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் நவீன கருவிகளுடன் கடல் நீர்நிலை ஆய்வு, மணல் தன்மை, குழாய்கள் பதிக்கும் பகுதி, மீன்வளப் பாதுகாப்பு, இயற்கை சூழல், மாசுபாடு, வனவளம் உள்ளிட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள அதிகாரி ஒருவர், ” நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையில் இரண்டாவது ஆலை அமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. சுமார் 85 சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளது.

இன்னும் மூன்று மாதங்களில் இரண்டாவது ஆலை பயன்பாட்டுக்கு வரும். இங்கு தற்போது மூன்றாவது ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தப் பணி முடிய குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்.

மூன்றாவது ஆலையில் சுமார் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இரண்டாவது, மூன்றாவது ஆலை பயன்பாட்டுக்கு வரும்போது சென்னையின் குடிநீர் தேவையில் 70 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்ய முடியும்” என்று உறுதியளித்துள்ளார்.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

39 பேருடன் மூழ்கிய சீனப் படகு: மீட்புப்பணியில் இந்தியா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share