புரட்டாசி மாத சனிக்கிழமையை எப்படிக் கொண்டாடலாம் என்று நினைப்பவர்கள், இந்த தினை கேசரி செய்து கொண்டாடலாம். தினை, கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். தினையில் நிறைந்துள்ள புரதச்சத்து உடலை வலுவாக்கும். வாய்வுக் கோளாறைப் போக்கும். பசியை உண்டாக்கும். மற்ற தானியங்களைவிட தினையில் இரும்புச்சத்து அதிகம் என்பதால் அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
தினை – அரை கப்
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
தண்ணீர் – 2 கப்
நெய் – கால் கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
உலர் திராட்சை, முந்திரி தலா – 10
கேசரி கலர் – 1 சிட்டிகை
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, உலர் திராட்சை, முந்திரியை வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் தினையை வறுக்கவும். பிறகு ஆறவிட்டு, மிக்ஸியில் ரவை போல் அரைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி, தினை ரவையைச் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் நாட்டுச் சர்க்கரை, கேசரி கலர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவும் (இடையிடையே நெய் சேர்த்துக் கிளறவும்). இறுகியதும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
கிச்சன் கீர்த்தனா: சோயா உருண்டை மசாலா
கிச்சன் கீர்த்தனா: சிவப்பரிசி பாயசம்