சிறுதானியங்களில் முக்கியமானது தினை. இதை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். தினையில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை அடங்கியுள்ளது. இந்த தினையில் தேங்காய்ப்பால் சேர்த்து புலாவ் செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
தினை அரிசி – ஒரு கப்
தேங்காய் – அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தண்ணீர் – ஒரு கப்
பச்சைப் பட்டாணி – அரை கப்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க…
பட்டை – 2
சோம்பு – கால் டீஸ்பூன்
பிரியாணி இலை – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
எப்படிச் செய்வது?
தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு இஞ்சி – பூண்டு விழுது, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும். தினை-தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.
குறிப்பு: அகலமான பாத்திரத்திலும் செய்யலாம். எளிதில் வெந்துவிடும். சாதமும் உதிரியாக இருக்கும்.