தன்னை சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என நாங்குநேரி மாணவன் சின்னத்துரை இன்று (மே 7) தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி மீது சக மாணவர்கள் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடந்து முடிந்த 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை மாணவர் சின்னத்துரை எழுதி இருந்தார். தொடர்ந்து நேற்று வெளியான பொதுத்தேர்வு முடிவில் சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து சின்னத்துரை வாழ்த்து பெற்றார். மேலும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி நிவேதாவும் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.
பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சின்னத்துரை, “சாதிய வன்கொடுமையால் சக மாணவர்களால் என் வீட்டில் வைத்து என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன்.
தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் மருத்துவமனையில் சிறந்தமுறையில் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனைக்கே வந்து ஆசிரியர்கள் எனக்கு பாடம் கற்பித்தார்கள். பின்னர் எனக்கு பிடித்த பள்ளியில் சேர்ந்து படிக்க தமிழக அரசு உதவியது.
நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண் பெற்றதால் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் வாழ்த்து தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளனர்.
நான் கல்லூரியில் படிப்பதற்கு உதவுவதாகவும், உயர்கல்வி செலவினை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். நான் மேலும் பி.காம் முடித்து சிஏ படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். எனக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்கக்கூடாது. என்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து நல்லநிலைக்கு வர வேண்டும்” என சின்னத்துரை தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாக்குப்பதிவு தரவுகளில் குளறுபடி : இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு கார்கே கடிதம்!
இ பாஸ் அமல் எதிரொலி : நீலகிரி எல்லையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!