கடுங்குளிர் : காஷ்மீர் போல் காட்சிதரும் உதகை!
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கி விட்டது. கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு பனிமூட்டங்கள் காணப்படுகின்றன. சில இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டமும் காணப்படுகிறது.
மேலும் இரவு தொடங்கி காலை 8 மணி வரையிலும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
அதுமட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் ஏற்படும் உறைபனியால் உதகையே ஒரு குட்டி காஷ்மீர் போல் காட்சியளிப்பதாகச் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 2 நாளைக்கு உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று (ஜனவரி 15) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதியில் இரண்டு நாளைக்கு இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும்.
காலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் ’விஜய்’ முன்னிலை!