புரண்டு படுத்த தென்பெண்ணை… பொங்கி வழியும் சாத்தனூர் அணை… நள்ளிரவில் நடந்தது என்ன?
தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் சாத்தனூர் அணையில், அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், வேலூர், கடலூர் என பல மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருகிறார்கள்.
நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை இந்த மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றை ஒட்டி அமைந்திருக்கும் கிராமப் பகுதிகளுக்குள் தண்ணீர் பாய்ந்து வீடுகள் வரை நுழைந்துவிட்டது.
2015 ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் முன்னறிவிப்பின்றி திறந்துவிட்டதால் சென்னை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். அது சென்னை என்பதால் பெரிய செய்தியாக மாறியது.
அதுமட்டுமல்ல, நேற்று முதல்வரே, ‘தூங்கி வழிந்த நிர்வாகம்…தூக்கத்தை தொலைத்த மக்கள்’ என்று அதிமுக ஆட்சியை விமர்சிப்பதற்கு 9 ஆண்டுகள் கழித்தும் முக்கிய அரசியல் ஆயுதமாக பயன்படுகிறது.
இதேநேரம் இப்போது தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள சாத்தனூர் அணையை திறக்க அதிகாரிகள் எப்போது முடிவெடுத்தனர்? அதுபற்றி ஆற்றங்கரை மக்களிடையே முறையான எச்சரிக்கை விட்டார்களா? என்ற கேள்விகள் இப்போது இந்த மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளன.
சென்னையில் தூறல் என்றாலும், சிறு மழை என்றாலும் தொடர்ந்து செய்தியாக்கும் முக்கிய ஊடகங்களும் தமிழகத்தின் உள் மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட கிராமங்களை பெரிதாக எட்டிப் பார்க்கவில்லை.
“இன்னிக்கு (டிசம்பர் 2) அதிகாலை 4 மணி இருக்கும். வீட்ல நல்லா தூங்கிக்கிட்டிருந்தோம். பையன் ஓடியாந்து, அப்பா எந்திரிப்பா… வீட்டுக்குள்ள தண்ணி புகுந்துடுச்சுப்பானு சொன்னான். ‘ரோட்ல வொர்க்ஷாப் வச்சிருக்கிற மூர்த்திதான் போன் பண்ணி, ஆத்து தண்ணி வீட்டுக்குள்ள வருது. முக்கியமானதை மட்டும் எடுத்துக்கிட்டு வெளியில வாங்கனு சொன்னாப்ல’ அப்படினு சொல்லிதான் மகன் என்னை எழுப்பினான்.
அப்புறம் சட்டுனு அக்கம்பக்கம் வீடுகளுக்கெல்லாம் சொல்லி நாலரை மணிக்கெல்லாம் அடிச்சு புடுச்சு வீட்டை விட்டு கெளம்பினோம். பயங்கர வேகத்துல தண்ணி உள்ள வந்துக்கிட்டிருந்துச்சு. தென்பெண்ணை ஆத்தை ஒட்டி கஸ்டம்ஸ் ரோடு அதைத் தாண்டிதான் எங்க வீடெல்லாம் இருக்கு, ஆனால் ஒரு ரோட்டைத் தாண்டி வெள்ளம் செம வேகமாக வந்துச்சு.
எங்க ஏரியா மட்டுமல்ல பக்கத்துல குமரப்பன் நகர், நடேசன் நகர், குறிஞ்சி நகர், ராஜா நகர், குண்டு சாலைனு எல்லா ஏரியாவுலையும் வெள்ளம். நாங்கல்லாம் அவசரமாக பிள்ளை குட்டிகளை எல்லாம் தூக்கிட்டு வெளிய ஓடி வரும்போது சிலர் போன் பண்ணி படகுகளை வரவழைச்சாங்க. அதுல ஏறி தப்பிச்சு வெளிய வந்தோம். அப்புறம் ஃபயர் சர்வீஸ் காரங்களும் வந்தாங்க.
ஆத்துல தண்ணி வருது வீட்டுக்குள்ள வரும்னு எங்களுக்கு யாரும் சொல்லலை. அப்புறம்தான் சாத்தனூர் டேம் தெறந்தாச்சு. எல்லா இடத்துலயும் தண்ணினு பசங்க சொன்னாங்க” என்று பயம் விலகாமல் நம்மிடம் பேசினார் கடலூர் வில்வநகர் ஏரியாவைச் சேர்ந்த பாரத்.
அதாவது இந்தப் பகுதி தென்பெண்ணை ஆறு கடலில் கலப்பதற்கு நான்கு கிலோ மீட்டர் முன்பு இருக்கும் பகுதி. இங்கேயே இப்படி என்றால்… சாத்தனூர் அணைக்கு அருகே இருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், தண்டராம்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு, மணலூர்பேட்டை , விழுப்புரம் மாவட்டம் திருக்கோவலூர் அரகண்டலூநல்லூர், எல்லீஸ் அணைக்கட்டு, திருவெண்னை நல்லூர், பேரங்கியூர், கடலூர் மாவட்டம் கள்ளிப்பட்டு, குச்சிப்பாளையம், மேல்குமாரமங்கலம் புலவனூர், கண்டரக்கோட்டை என வழியெங்கும் இதைவிட மோசமான அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள் மக்கள்.
உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான லலித்குமார் நம்மிடம் பேசுகையில்,
“ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் பெரு மழை பெய்துகொண்டிருக்கும் இதே நேரம் கர்நாடகா, ஆந்திரா என்று அண்டை மாநிலங்களிலும் தொடர் மழை பெய்துகொண்டிருக்கிறது.
தென்பெண்ணையாறு கர்நாடகாவில் நந்திமலையில் உருவாகிறது. அங்கிருந்தே கன மழை பெய்துகொண்டிருக்கிறது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் பெய்யும் மழையும் தென்பெண்ணையில்தான் கலக்கிறது.
அங்கிருந்து ஓசூர் வருகிறது. ஓசூரில் கெலவரப்பள்ளி அணை அமைந்திருக்கிறது. அந்த அணை தாண்டி கிருஷ்ணகிரியில் கேஆர்பி அணை அமைந்திருக்கிறது. இந்த அணைகளை எல்லாம் தாண்டி, திருவண்ணாமலையில் சாத்தனூர் அணை அமைந்துள்ளது.
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் என மாவட்டங்களைக் கடந்து கடலூரில் கடலில் கலக்கிறது. இதற்கிடையே ஊத்தங்கரையில் பாம்பாறு தென்பெண்ணையில்தான் கலக்கிறது. கிருஷ்ணகிரியில் பல சின்ன சின்ன ஆறுகள் தென்பெண்ணையில்தான் கலக்கின்றன.
தென்பெண்ணை ஆறு, இவ்வாறு அது உற்பத்தி ஆகும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் இடம் வரை அனைத்து பகுதிகளிலும் சராசரியாக 40 சென்டி மீட்டர் முதல் 50 சென்டி மீட்டர் வரை ஒரே நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதுபோல் கடந்த 50 ஆண்டுகளில் இருந்ததில்லை.
1972 ஆம் ஆண்டு இதேபோல தென்பெண்ணை ஆற்றில் அதன் உற்பத்தி தொடங்கி கடலில் கலக்கும் கடலூர் வரை கன மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்குப் பிறகு இப்போதுதான் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1971 இல் இப்படிப்பட்ட வெள்ளப்பெருக்கு நடந்தபோது, தென்பெண்ணை ஆறு புரண்டு படுத்த மாதிரி… சுற்று வட்டாரம் எல்லாம் வெள்ளம் என்று என் ஊரில் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல இப்போதும் தென் பெண்ணை புரண்டுபடுத்திருக்கிறது. இந்த வெள்ளத்தால் ஆற்றின் போக்கில் இயற்கையாகவே பல மாற்றங்கள் ஏற்படும்.
இதை உணர்ந்து கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் என இந்த ஐந்து மாவட்ட கலெக்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒருங்கிணைந்து செயல்பட்டது மாதிரி தெரியவில்லை” என்கிறார் கண்டரக்கோட்டை வழக்கறிஞர் ராஜசேகர்.
“கும்பகோணம் சாலை பண்ருட்டி விழுப்புரம் இடையில் உள்ள தென்பெண்ணையாறு பாலத்தில் இரண்டு பக்கமும் ஆற்று தண்ணீர் சாலையில் ஏறி கிளை ஆறாக ஓடுகிறது, ஆற்றின் அணைகள் பலப்படுத்தாததால் பல கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அணை திறக்கப்படுவது பற்றி மக்களுக்கு மட்டுமல்ல அரசுத் துறையினருக்கே முன்னறிவிப்பு இல்லை” என்கிறார்
சாத்தனூர் அணை திறக்கப்பட்டதில் என்ன நடந்தது என்று அந்த அணையை நிர்வகிக்கும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்,
“சாத்தனூர் அணை 119 அடி கொள்ளளவு கொண்டது. 3 மாதம் முன்பு அணையில் 70 அடிதான் தண்ணீர் இருந்தது. இந்த மழைக்கு சில நாட்கள் முன்பு 117 அடி நிரம்பியிருந்தது. முந்தா நாளில் இருந்தே நீர் வரத்து அதிகமாக இருந்தது. இதுபோன்ற சமயங்களில் அணையின் முழு கொள்ளளவான 119 அடி வரை நிரம்ப அனுமதிக்க மாட்டார்கள். அதிகபட்சம் 117 அடி வரைதான் தேக்கி வைக்க வேண்டும். ‘
அதனால் நேற்று முன் தினத்தில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை திறந்துகொண்டிருந்தார்கள். அணை திறப்பதைப் பொறுத்தவரை அணையின் பொறுப்பு வகிக்கும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலெக்டரிடம் தகவல் சொல்லுவார்கள்.
கலெக்டர் சென்னையில் இருக்கும் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு மீண்டும் அணை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு திறக்கச் சொல்லுவார். அதன்படி கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் 117 அடி தண்ணீர் மட்டத்தை மெயின் டெயின் செய்து வந்தார்கள்.
ஆனால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்துக் கொண்டே இருக்க, மழையும் தொடர்ந்து பெய்துகொண்டே இருந்ததால் நேற்று இரவு சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. சென்னையில் மேலதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் திறக்கப்பட்டது. திறக்காமல் விட்டால் அணைக்கே ஆபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது” என்கிறார்கள்.
சாத்தனூர் அணை பற்றி நீர்வளத்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். அணையைப் போலவே நம்மிடம் மனம் திறந்தார்கள்.
“சாத்தனூர் அணையின் கொள்ளளவு 119 அடி. ஆனாலும் இதில் சுமார் இருபது அடிக்கு மேல் சேறுதான் இருக்கிறது. பல வருடங்கள் ஆனதால், இந்த சேறு மிகவும் இறுகியிருக்கிறது. இந்த சேற்றை அகற்றினால்தான் அணையின் கொள்ளளவு 119 அடியாக இருக்கும். இல்லையென்றால் அணைக்கே ஆபத்தாக முடியும் என்று சென்னையில் இருக்கும் நீர்வளத்துறை தலைமைக்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக ப்ரபோசல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் தலைமை இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
2011 அதிமுக ஆட்சிக் காலத்தில் இது ஜெயலலிதாவின் கவனத்துக்கே கொண்டு செல்லப்பட்டது. அப்போது அணையில் மிகக் குறைந்த நீர் இருக்கும் கோடைக் காலத்தில் சேறு அகற்றலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அப்போது இங்கே மின் உற்பத்தி நிலையம் இருப்பதால், மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால், அப்போது சேறு அகற்றும் திட்டம் கைவிடப்பட்டது.
இதன் பின் பகுதி, பகுதியாக சேறை அகற்றலாம் என்று திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. ஆனால் சாத்தனூர் அணையை எந்த ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை.
இப்போதைய நிலவரப்படி சாத்தனூர் அணையின் மொத்த நீர் மட்டம் 119 அடி அல்ல… அதில் உறுதியாக 20 முதல் 25 அடி சேறுதான் இருக்கிறது. அடியில் சேறு அடர்த்தியாக இருப்பதால் சுமார் 100 அடிதான் இப்போதைய சாத்தனூர் அணையின் உண்மையான கொள்ளளவு. நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் அந்த சேற்றை அகற்றினால் அணையின் கொள்ளளவு மேலும் அதிகரிக்கும். மழைக் காலத்தை மட்டும் கருதாமல் நீண்ட கால செயல் திட்டத்தின் அடிப்படையில் யோசித்தால் தான் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்” என்கிறார்கள்.
-வணங்காமுடி, வேந்தன்
செய்திகளைஉடனுக்குடன்பெறமின்னம்பலம்வாட்ஸப்சேனலில்இணையுங்கள்….
மலை ஆக்கிரமிப்பு: நிலச்சரிவால் திணறும் திருவண்ணாமலை… இன்னொரு வயநாடு?
வெள்ளத்தில் புதுச்சேரி : ரூ.5000 நிவாரணம் அறிவித்த ரங்கசாமி