ஓடும் ரயிலில் ஏறிய திருடனுக்கு நேர்ந்த சோகம்!
சென்னையில் இன்று (அக்டோபர் 6) காலை ஓடும் ரயிலில் பயணிகளிடம் இருந்து செல்போன் திருட முயன்ற திருடனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில் வண்ணாரப்பேட்டை அடுத்த பென்சில் ஃபேக்டரி அருகே சென்று கொண்டிருந்தபோது கொள்ளையர்கள் சிலர் ரயிலிலிருந்த பயணிகளிடம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவன், ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்துள்ளான். அவன் மீது ரயில் சக்கரம் ஏறி இறங்கியதில் அவரது இடது கால் துண்டானது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் காயமடைந்த கொள்ளையனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் கால் துண்டாகிப் போன கொள்ளையன் 24 வயதுடைய நவீன் என்ற அட்டை நவீன் ஆவான். இவன் மீது ரயில்வே காவல் நிலையத்தில் மட்டும் 6க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திலும் கொள்ளையன் நவீன் மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவனது கூட்டாளி குடுவை சுரேஷும் கடந்த ஆண்டு ஓடும் ரயிலில் கொள்ளையடிக்க முயன்ற போது தவறி விழுந்ததில் கால் துண்டானது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
கொடூர விபத்து: ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர்கள் உயிரிழப்பு!
இந்தியாவில் 4 இருமல் மருந்துகளுக்கு தடை ஏன்? உலக சுகாதார நிறுவனம்!