தீரன் பட பாணி: வட இந்தியாவில்  கெத்து காட்டிய தமிழக போலீஸ்!

தமிழகம்

நடிகர் கார்த்தி நடித்து வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் காட்சியைப் போன்று வடஇந்திய கிராமம் ஒன்றில் அதிரடியாக புகுந்து குற்றவாளியை தமிழக போலீசார் பிடித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் கோவையில் இருந்து ஐதராபாத்திற்கு நகைகளைக் கொண்டு சென்ற ஒரு வாகனத்தில் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய 6.5 கிலோ தங்கம் திருடு போனது.

இதையடுத்து, நகைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை சுங்கச்சாவடிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த வாகனத்தை கார் ஒன்று பின் தொடர்ந்து சென்றது.

போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர் மத்திய பிரதேச மாநிலம் கஞ்சர்சேர்வா என்ற பகுதியைச் சேர்ந்த சின்னு முஸ்தாக் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்குச் சென்றனர்.

கஞ்சர்சேர்வா பகுதியில் குற்றப்பின்னனி கொண்ட நபர்கள் பலர் வசித்து வருவதும், அவர்களிடம் நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது.

அந்த இடத்திற்கு செல்ல உள்ளூர் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் பலர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உள்ளூர் போலீஸ் உதவியுடன் கோவை தனிப்படை போலீசார் கஞ்சர்சேர்வா கிராமத்திற்குச் சென்று, அங்கு பதுங்கியிருந்த குற்றவாளி சின்னு முஸ்தாக்கை பிடிக்க முயன்றனர்.

அப்போது கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து போலீசை தாக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே உள்ளூர் போலீசார் ஒருபுறம் துப்பாக்கியைக் காட்டி கிராம மக்களை கட்டுப்படுத்த, மறுபுறம் தமிழக போலீசார் சின்னு முஸ்தாக்கை வண்டியில் ஏற்றி அங்கிருந்து விரைந்தனர்.

தமிழில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வரும் காட்சியைப் போல், சுமார் 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடந்து முடிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை தனிப்படை போலீசார் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். இரு மாநில போலீசாரின் உதவியுடன் திருடப்பட்ட 6.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வடஇந்தியாவிற்குள் சென்று துணிச்சலாக குற்றவாளியைப் பிடித்து வந்த தமிழக போலீசாருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கலை.ரா

நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!

கலைஞரை நினைவுபடுத்திய கமல்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *