the young attend suicide in thiruvarur

புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டிய கடன் செயலி: இளைஞர் தற்கொலை!

தமிழகம்

ஆன்லைனில் கடன் வாங்கிய திருவாரூர் மாவட்ட இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரிவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவருடைய இளைய மகன் ராஜேஷ் (27). இவர் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

ராஜேஷ் ஆன்லைன் செயலி மூலம் அடிக்கடி பணம் பெற்று வந்துள்ளார். அதனை சரியாக திருப்பி செலுத்தியும் வந்துள்ளார். இந்த நிலையில் இறுதியாக இன்ஸ்டாகிராமில் வந்த லிங் மூலம் ஆன்லைன் செயலி ஒன்றில் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையையும் ராஜேஷ் உடனடியாக திருப்பி செலுத்தி விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜேஷ் பணத்தை செலுத்திய பிறகும் ஆன்லைன் கடன் செயலி வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளது. ராஜேஷிடம் வீடியோ கால் மூலமாகவும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதன் உச்சக்கட்டமாக ராஜேஷின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து அவரது வாட்ஸ் அப்பிற்கே அனுப்பி வைத்துள்ளனர் ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கியவர்கள். இதனையடுத்து, கேட்கின்ற பணத்தை கொடுக்கவில்லை என்றால் மார்பிங் செய்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

அத்துடன் ராஜேஷின் மார்பிங் செய்த புகைப்படங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனடியாக உறவினர்கள் அவரது உடலை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு, ராஜேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வலங்கைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஷிடம் பணம் கேட்டு மிரட்டிய கடன் செயலி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோனிஷா

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

திமுக மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *