ஃபெஞ்சல் புயலின் பாய்ச்சல் டெல்டாவை பயமுறுத்தி, சென்னையை பயமுறுத்தி கடைசியில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை பலமாக தாக்கியிருக்கிறது.
இதுவரை எத்தனையோ ஆண்டுகள் எவ்வளவோ மழை பெய்த நிலையிலும் புதுச்சேரி துடைத்து வைத்தது மாதிரி இருக்கும். ஆனால் இப்போது பெய்த மழையில் புதுச்சேரியின் நகரப் பகுதி, சுற்று வட்டார கிராமங்கள் என எல்லாமே மூழ்கிவிட்டன.
ஒயிட் சிட்டி அதாவது வெள்ளை நகரம் என அழைக்கப்படும் புதுச்சேரி வெள்ளக்காடாக மாறிவிட்டது.
ஆங்காங்கே கார்களும் டூவீலர்களும் மூழ்கிக் கிடக்கின்றன. சுமார் 50 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் புகுந்திருக்கிறது. இவற்றில் கணிசமான பகுதிகளில் தரைத் தளத்தில் லாஃப்ட் வரை தண்ணீர் ஏறியதால் பலரும் முதல் தளம், மேல் மாடி என சென்று உயிரை கையில் பிடித்திருந்தனர்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/WhatsApp-Image-2024-12-01-at-17.09.08_bd6a4f8a-1024x682.jpg)
புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 46 சென்டி மீட்டர் மழை என்ற பிரம்மாண்ட மழை அளவு புதுச்சேரியில் பதிவாகியிருக்கிறது.
புதுச்சேரி நகரில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு வரலாறு காணாத மழை மட்டுமே காரணம் அல்ல, வரலாறு காணாத மெத்தனமும்தான் என்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி அதிமுக செயலாளருமான அன்பழகன்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/WhatsApp-Image-2024-12-01-at-20.48.14_43ee0b36.jpg)
அவர் நம்மிடம் பேசுகையில்,
“பிரெஞ்சு காலத்தில் கட்டமைக்கப்பட்டது புதுச்சேரி. மிக அழகாக மட்டுமல்ல, மிக தூய்மையாகவும் புதுச்சேரியின் உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் பிரெஞ்சுக்காரர்கள். புதுச்சேரியில் எவ்வளவு மழை பெய்தாலும் சில மணித்துளிகளுக்குள் அத்தனை மழையும் கடலுக்குள் சென்று சேர்ந்து விடும்படி சாலைகள், வீடுகள், கால்வாய்களின் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கடற்கரைக்கு அருகே வீதிகள் கடற்கரையில் சென்று முடியும்படி பிரெஞ்சு அரசு காலத்திலேயே மழைநீர் வடிகால் கட்டப்பட்டது. மற்ற வீதிகளின் தண்ணீர் வடிவதற்காக ஆங்கங்கே வாய்க்கால்கள் அமைத்து வடிகால் வசதிகள் செய்யப்பட்டன.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/Screenshot-2024-12-01-204406.png)
ஆனால் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியிலே வைத்திலிங்கம் முதல்வராக இருந்தபோதுதான்… பாதாள சாக்கடைத் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தனர். அதை ஒழுங்காக செய்யாமல் படு பாதகமாக செய்தனர். இப்போதைய ரங்கசாமியின் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவின் நமச்சிவாயம்தான், அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.
அவரது நிர்வாகத்தில் செய்யப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் முழுதாக ஃபெயிலியர் ஆக முடிந்தது. காரணம் வேலைகளில் அரசியல் தலையீடுகளும் வசூலும் அதிகம் இருந்ததுதான்.
கடலை ஒட்டியுள்ள முகத்துவாரம் தான் நீரை உட்கொண்டு கடலுக்குள் தள்ளும். சீரான இடைவெளியில் முகத்துவாரத்தை அடைப்புகள் எடுத்து ஆழப்படுத்துவார்கள். அதை செய்யவே இல்லை.
புதுச்சேரி வடிகால் வாய்க்கால்கள் செஞ்சி சாலை வாய்க்கால், வல்லவாரி வாய்க்கால் போன்ற பல வாய்க்கால் தூர்வாரப்படவே இல்லை. அவற்றில் இருக்கும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/image-1-1024x630.jpg)
இப்போது வாய்க்கால்களுக்குள் கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் எல்லாம் அடைத்துக் கொண்டது. வல்லவாரி வாய்க்காலில் கார், ஆட்டோ, இன்னோவா கார்கள் விழுந்து மிதக்கின்றன. இதனால் வாய்க்கால் தண்ணீர் சாலைகளில் ஏறிவிட்டது. முத்தியால்பேட்டை பகுதியே மிதக்குது.
பாலாஜி தியேட்டர் பின்புறம் கார்கள் எல்லாம் மூழ்கிவிட்டன. வில்லியனூரில் தரைத் தளத்தில் கிட்டத்தட்ட சீலிங் வரை தன்ணீர்.
நகரப் பகுதிகள் இப்படியென்றால் மனவெளி சட்டமன்ற தொகுதி போன்ற கிராமப்புறங்களில் சொல்லவே வேண்டியதில்லை. வீதியில் ஆறாக ஓடி இடுப்பு அளவு வெள்ளம். இதற்கு இப்போதைய மற்றும் கடந்த கால ஆட்சியாளர்கள்தான் புதுச்சேரியின் இந்த நிலைமைக்கு காரணம்” என்கிறார் அன்பழகன்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/cyC7UQBp-image-1024x576.jpg)
லேண்ட் லைன் இணைப்புகளை எல்லாம் அகற்றிவிட்டு ஃபைபர் நெட் இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், மின்சாரம் இல்லாத நிலையில் போன்கள் வேலை செய்யவில்லை. நேற்று இரவு புதுச்சேரி போலீசாரின் வாக்கி டாக்கிகள் கூட வேலை செய்யவில்லை.,
மின்சார அலுவலகங்கள், தீயணைப்புத் துறை அலுவலகங்கள் என மழையில் முக்கிய பங்காற்ற வேண்டிய அலுவலகங்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்துவிட்டது.
புதுச்சேரியின் முகத்தையே மாற்றியமைத்திருக்கிறது இந்த பெருமழை. நிர்வாகத் தவறுகளை உணர்ந்து புதுச்சேரியின் உள்கட்டமைப்பை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தை உணர்த்தியிருக்கிறது ஃபெஞ்சல் புயல்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி
பேய்யென பெய்யும் ஃபெஞ்சல் : நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா?
கொங்கு ’உணவு’ பெஷ்டிவல் இல்ல… ’திருட்டு’ பெஷ்டிவல் – கொந்தளிக்கும் கோவை மக்கள்!