காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வடக்கே நகர்ந்து தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டதாக தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று (அக்டோபர் 16) தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலை கரையை கடக்கக்கூடும்.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் சென்னை வானிலை மையம் விடுத்திருந்தது.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு (KTCC) மக்களுக்கு சில நல்ல செய்திகள் உள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்று கடக்கும் பகுதி சென்னைக்கு வடக்கே இருக்கும் என்பதால் மக்கள் சற்று இளைப்பாறலாம். முக்கிய காற்றழுத்த தாழ்வுநிலையில் இருந்து இன்று பெய்ய இருந்த கனமழை நமக்கு கிடைக்கப்போவதில்லை. சாதாரண மழை பெய்யலாம்!! நாம் பார்க்கிறபடி காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டது.
சென்னையில் 18-20 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தில் நகரும் போது, சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழையாக தான் இருக்கும். எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம்!!!
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஸ்ரீவில்லிபுத்தூர் வணிக வளாகம் கட்டும் பணியைத் தள்ளிவைக்க வேண்டும்… எதற்காக?
மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை!