தமிழகம் முழுவதும் இன்று ( ஜூலை 24 ) 10 ஆம் வகுப்பு கல்வி தகுதிக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் மூலம் இந்த ஆண்டு 7,301 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 7,500 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 9,035,354 ஆண் தேர்வர்கள் 12,67,457 பெண் தேர்வர்கள் என 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வின் போது 534 பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தேர்விற்கான ஏற்பாடுகள் நடைபெற்று இன்று தேர்வுக்கு தேர்வு மையங்கள் தயாராக இருந்தது. காலை 8.30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையங்களில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து காலை 8 மணி முதலே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வருகை தந்தனர். தேர்வு முடிந்து 12.45 மணிக்குள் தேர்வர்கள் யாரும் தேர்வு எழுதும் அறையை விட்டு வெளியே வர கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்து.
மேலும் ஒஎம்ஆர் தாளில் கருப்பு மை பேனாவை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விடை தெரியாத கேள்விகளுக்கு ஒஎம்ஆர் தாளில் ( E ) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று தேர்வு நடைபெறுவதனால் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தேர்வு எழுத தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு மைய அதிகாரிகள் உறுதியாக கூறியதால், தாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். சில இடங்களில் தேர்வர்கள் வாக்குவாதம் மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தேர்வு எழுதிய தேர்வர்கள் சிலர் இந்த ஆண்டு வினாத்தாள் எளிதாக இருந்ததாக தெரிவித்திருந்தனர்.
மோனிஷா