தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக (TNUSRB )ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை நியமித்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. 1988ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு காவல்துறையின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், “முறையான விதிமுறைகளை பின்பற்றி சுனில் குமார் நியமிக்கப்படவில்லை. தற்போது டிஜிபி அந்தஸ்தில் 16 பேர் உள்ளனர். ஆனால் ஓய்வு பெற்ற டிஜிபியை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமித்தது பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயல். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக இருந்த சீமா அகர்வால் தீடீரென மாற்றப்பட்டு செயற்கையாக காலியிடம் உருவாக்கப்பட்டு அந்த இடத்தில் சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கூறுகின்றன. எனவே இடைக்கால நிவாரணமாக தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியத்தின் தலைவராக சுனில்குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுனில்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
ஆனால் இன்று (நவம்பர் 11) வழக்கு பட்டியலிடப்படாத நிலையில், மனுதாரர் தரப்பில் நீதிபதி வி.பவானி சுப்பராயனிடம் முறையிடப்பட்டது.
அப்போது, பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா? என்று கேட்ட நீதிபதி வழக்கை பட்டியிலடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட சுனில்குமார் தகுதி இல்லாத நபராக இருந்தால் மட்டுமே தலையிட முடியும். இல்லையென்றால் அரசின் கொள்கை முடிவில் எவ்வாறு தலையிட முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடாது. அனைத்திற்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
முன் ஜாமீன் கோரி கஸ்தூரி மனுத் தாக்கல்!
டிரம்ப் மனைவி மெலானியாவின் நிர்வாண படம்…. ஒளிபரப்பிய ரஷ்ய அரசு டிவி!