புதுச்சேரியில் பிரபலமான மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது இன்று (நவம்பர் 30) காலை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
யானை லட்சுமி இறந்ததை அடுத்து தமிழ்நாடு வனத்துறை மருத்துவர்கள் யானைக்கு உடனடியாக பிரதே பரிசோதனை செய்தனர். பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக மணக்குள விநாயகர் கோவில் எதிரே வைக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் பலரும் நேரில் வந்து யானை லட்சுமிக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய காட்சிகள் காண்போரை கலங்க வைத்தது.
மாலையில் புதுச்சேரியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இறுதி ஊர்வலத்தினை தொடர்ந்து யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
32 வயதான யானை லட்சுமியின் மரணத்தினை ஏற்க முடியாத பக்தர்கள் பலரும் அதன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். சிலர் யானையின் மரணத்திற்கு நீரழிவு நோய் காரணமென்றும், சிலர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பே காரணம் என்றும் கூறி வருகின்றனர்.
6 வயதில் வந்த குட்டி லட்சுமி
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள ஷாசம் கெமிக்கல் கம்பெனி கடந்த 1996ம் ஆண்டு 6 வயதான லட்சுமி யானையை அப்போது முதல்வராக இருந்த திமுகவைச் சேர்ந்த ஜானகி ராமன் முன்னிலையில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வழங்கியது.
அதுமுதல் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. மேலும் அங்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை மறக்காமல் தரிசித்து விட்டு செல்வர். அப்போது யானைக்கு வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை வழங்கி செல்வது வழக்கம்.
யானைக்கு நீரிழிவு நோய்
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் யானை லட்சுமிக்கு காலில் புண் ஏற்பட்டதால், பக்தர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் மணக்குள விநாயகர் கோவிலுக்கும் அழைத்து செல்லப்படவில்லை.
மாறாக அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஈஸ்வரன் கோவில் கொட்டிலில் யானை லட்சுமி தங்க வைக்கப்பட்டது. நீரழிவு நோய் காரணமாக அதற்கு உணவாக பழ வகைகள் வழங்குவது தவிர்க்கப்பட்டது. மாறாக களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை, அருகம்புல் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டது.
தின நடைபயிற்சியில் லட்சுமி
மேலும் அடிக்கடி அதற்கு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை மருத்துவர்கள் யானையை தினமும் கட்டாயம் நடைபயிற்சி அழைத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதன்படி ஈஸ்வரன் கோவில் கொட்டிலில் இருக்கும் யானை லட்சுமி தினமும் 1 கி.மீ தூரம் அங்குள்ள சிமெண்ட் வீதியில் பாகனுடன் சேர்ந்து நடைபயிற்சி மேற்கொள்வது வாடிக்கையானது.
இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தபோதுதான் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளது.
80 வயது வரை வாழும் யானைகள்
காட்டு விலங்கான யானை சராசரியாக 80 வயது வரை வாழும் ஒரு உயிரினம். கேரளாவின் பன்னாவில் உள்ள 105 வயதான கோவில் யானை வத்சலா உலகின் மிக வயதான யானை என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் 32 வயதான லட்சுமி இறந்துள்ளது தற்போது பக்தர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காடாளும் யானைக்கு நீரழிவு நோய் அரிது
இதுகுறித்து பிரேத பரிசோதனை செய்த வனத்துறை மருத்துவர் ஒருவரிடம் விசாரித்தபோது, ”யானைகளுக்கு நீரழிவு நோய் என்பது மிகவும் அரிதானது. காட்டில் குடும்பமாக பல ஏக்கர் பரப்பளவில் சுதந்திரமாக சுற்றித்திரியும் யானைகளுக்கு நீரழிவு நோய் என்பது மிக மிக அரிதானது.
ஆனால் ஈஸ்வரன் கோவில் அருகே லட்சுமி யானை தங்கவைக்கப்பட்ட கொட்டிலுக்கு மிக சிறிய இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டில் மரம், செடி, கொடிகளை உண்டு வாழும் யானைக்கு இங்கே உணவாக தயிர்சாதம் மற்றும் பழவகைகளே கொடுக்கப்பட்டுள்ளது. இது யானை லட்சுமிக்கு நீரழிவு நோய் ஏற்பட முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
எனினும் யானை லட்சுமியின் இறப்புக்கு நீரழிவு நோய்தான் காரணம் என்று சொல்ல முடியாது. நாளை காலையில் வர இருக்கும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் அதன் உண்மை நிலவரம் தெரியவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பீட்டா எதிர்ப்பு
இதற்கிடையே யானைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோதே அதனை காட்டுக்கு அனுப்பி வைக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனை ஏற்க மறுத்த புதுச்சேரி அரசு, இது கோவில் யானை ஈஸ்வரன் கோவிலில் தங்க வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கு உலகளவில் விலங்களுக்காக குரல் கொடுத்துவரும் பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து 13 ஊசிகள்
இதற்கிடையே நேற்று மாலை திடீரென யானை லட்சுமிக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டதையடுத்து வனத்துறை மருத்துவர்கள் அடுத்தடுத்து 13 ஊசிகளை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது போடப்பட்ட 13 ஊசியும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
ஆளுநர் அஞ்சலி; முதல்வர் எங்கே?
யானை இறந்த தகவல் அறிந்து விரைந்து வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் யானைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மணக்குள விநாயகர் கோவில் எதிரே யானை லட்சுமி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் யானை லட்சுமிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஆனால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கோவில் யானை வைக்கப்பட்ட இடத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் இருந்தும் அஞ்சலி செலுத்த வரவில்லை. இது புதுச்சேரி மக்கள்மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கெட்ட சகுனமாக கருதும் மக்கள்
அதேபோல நேற்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரியில் பிரசத்தி பெற்ற ஜென்மராகினி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பாதியிலேயே அறுந்து விழுந்தது.
இந்நிலையில் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்ற 32 வயதான கோவில் யானை லட்சுமி இறந்துள்ளதை புதுச்சேரி மக்கள் அபசகுனமாகவே கருதுகின்றனர்.
இதுவரை யானையின் இறப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், நாளை வரவிருக்கும் பிரேத பரிசோதனை அறிக்கையில் லட்சுமி இறந்ததற்கான உண்மை காரணம் தெரியவரும்.
வணங்காமுடி
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை- கேசவ விநாயகன் மோதல் எதிரொலி: தமிழக பாஜகவில் திடீர் மாற்றம்!
சர்ச்சையில் லைகர் : அமலாக்கத்துறை முன்பு பிரபல நடிகர் ஆஜர்!