‘தமிழகத்தில் பொது விநியோக முறை சிறப்பாகச் செயல்படுகிறது” என மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவரும் பொருளாதார ஆய்வாளருமான ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று (செப்டம்பர் 21)செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயரஞ்சன். அப்போது அவர், ”சில பொருள்களின் விலை வேகமாக ஏறுகிறது என்றால் உடனடியாக சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்.
எடுத்துக்காட்டாக அரிசியின் விலை ஏறுகிறது என்றால், உடனடியாக ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும். அல்லது ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களின் மீது அதிகமான வரி விதிக்கப்படும்.
இதற்கான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு புள்ளி விவரங்கள் வேண்டும். அந்த புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், தென் மாநிலங்களில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மிகவும் குறைவாக இருக்கிறது.
வட இந்திய மாநிலங்கள் மற்றும் இந்தியாவோடு இதை ஒப்பிடும்போது தென் மாநிலங்களில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் குறைவாக இருக்கிறது.
பொதுவாக, இந்திய அளவில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் 7.6 சதவிகிதம் இருக்கிறது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாத கணக்கெடுப்பின்படி, தென் மாநிலங்களில் 5 சதவிகிதம்தான் இருக்கிறது.
இதற்கு வலுவான காரணம், பொது விநியோக முறை. தமிழகத்தைத் தவிர இதர மாநிலங்களில் எல்லாம் இலக்கு சார்ந்த பொது விநியோக முறைதான் உள்ளது.
ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் எல்லோருக்கும் பொது விநியோகம் வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இது, மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மாறுபடுகிறது. இன்னொன்று நாம் சிறப்பு பொது விநியோக முறையைச் செயல்படுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
மாதந்தோறும் 1 லிட்டர் பாமாயில், 1 கிலோ துவரம் பருப்பு என எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்தப் பொருட்கள், சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருக்கிறது.
அதுபோல் இந்த ஆண்டு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தபோதும், நாம் மிகக் குறைவான விலைக்கு வழங்கி வருகிறோம். இது, சந்தை விலையைவிட 6 சதவிகிதம் குறைவாக இருக்கிறது. அதற்காக, நம் அரசு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
ஒன்றிய அரசு இதற்கென ஒரு மானியத்தை வழங்கினாலும், தமிழக அரசு வருடத்துக்கு இதற்காக நிறைய செலவு செய்கிறது. அரிசிக்காக வருடத்துக்கு சராசரியாக 2 ஆயிரத்து 205 கோடியை வழங்குகிறது.
துவரம் பருப்புக்கு வருடத்துக்கு சராசரியாக 1,500 கோடி ரூபாயும், பாமாயிலுக்கு வருடத்துக்கு சராசரியாக 2400 கோடி ரூபாயும் செலவு செய்ய வேண்டியுள்ளது.
சிறப்பு பொது விநியோக முறை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. ஆக, இதன்மூலம் விலைவாசி ஏற்றத்திலிருந்து சாமானிய மக்களை காப்பாற்ற முடிகிறது.
விலைவாசி ஏற்றம் பெரும் பணக்காரர்களைவிட ஏழைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. பொதுவிநியோகத் திட்டம் தற்போது சீராக செயல்படுவதால் தமிழகத்தின் சில்லறை பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
ஆவின் பாலில் ஈ: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்!
ஆ.ராசாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை