தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரும்பு விவசாயிகளின் போராட்டத்தால் மக்களை மகிழ்விக்கும் விதமாக, கரும்பு ஒன்றையும் வழங்குவதாக முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் தரம் இல்லாத, அளவு குறைத்து வழங்கப்பட்ட பொருட்களால் ஆளும் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அத்துடன் இதைக் கொள்முதல் செய்ததில் பெருமளவு ஊழல் நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியதை அடுத்து, மேலும் ஆளும் அரசு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.
இதையடுத்து, இந்த ஆண்டும் அதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய தமிழக அரசு, 2.19 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை கொடுப்பதாக அறிவித்தது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என கரும்பு பயிரிடப்பட்டு காத்திருந்த விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
பொங்கல் பரிசாக கரும்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, ’கரும்பு விவசாயிகளை வாழவைக்க கரும்புகளை நல்ல விலைக்கு அரசு கொள்முதல் செய்து பொங்கல் பரிசுப் பொருளாக கரும்பும் வழங்கவேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 23ஆம் தேதி கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பன்னீர் கரும்பு விவசாயிகள் குரல் கொடுத்து வந்தனர்.
பன்னீர் கரும்பு கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களில் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கர் பயிரிட ஒரு லட்சம் செலவாகும். அரசு கொள்முதல் செய்தால் ஏக்கருக்கு இரண்டு முதல் இரண்டரை லட்சம் கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.
பன்னீர் கரும்பு விவசாயிகளின் நிலைமையை அறிந்த உளவுத்துறை, தமிழகம் முழுவதும் பன்னீர் கரும்பு பயிரிடும் விவசாயிகளைக் கணக்கெடுப்பு செய்தது. அதன்பிறகு, ‘அரசு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்வதால், சுமார் 15 லட்சம் விவசாய குடும்பங்கள் பலனடைவார்கள். இதனால் மக்களும் மகிழ்ச்சியடைவார்கள், கரும்பு விவசாயிகளும் பலன் பெறுவார்கள்’ என உளவுத்துறை முதல்வரிடம் முழுமையான ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ’கரும்பு கொள்முதல் செய்வதால் வெறும் ரூ.70 கோடிதான் செலவாகும், இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்’ என அதிகாரிகள் ஆலோசனை வழங்க, முதல்வரும் கரும்பு வழங்குவதற்கான ஆணையில் கையெழுத்திட்டு விவசாயிகளையும், மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மக்களிடம் நேரடியாக பணமாக ஆயிரம் ரூபாய் கொடுப்பதால், பொங்கல் பரிசு பொருட்களில் நடக்கும் ஊழலும் தவிர்க்கப்பட்டுள்ளது, இதற்கு கடந்த ஆண்டு மின்னம்பலம் பதிவு செய்த செய்திகளும் ஒரு காரணம் என்கிறார்கள் கூட்டுறவுத் துறை டைரக்டர்கள்.
வணங்காமுடி
குடிநீரில் மலம் கலப்பு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!
நீலகிரி வரையாடு பாதுகாப்பு: தமிழக அரசு புது திட்டம்!