தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளரான எஸ். எஸ். பாலாஜி, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக எஸ்.எஸ்.பாலாஜி இன்று (செப்டம்பர் 28) வெளியிட்ட அறிக்கையில்,
“கடந்த ஒரு வார காலமாகவே சோர்வாக, உடல் வெப்பம் சற்று அதிகரித்து இருந்த நிலையில் என் பணிகளை செய்து வந்தேன்.
இந்நிலையில் கடந்த 25.09.2023 அன்று மாலை சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைகள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைப்பெற்ற ’மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு’ கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் போதே மிகவும் சோர்வுடனே இருந்தேன்.
அந்நிகழ்ச்சி முடிந்து பொதுக்கணக்கு குழு கூட்டத்திற்கு 26.09.23 அதிகாலை திருவாரூர் சென்றடைந்தேன்.
26.09.23 முழுதும் திருவாரூர் ஆய்வு பயணம் முடிந்து அன்று இரவு தஞ்சாவூர் சேர்ந்ததும் எனது உடல்நிலை பார்த்து சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு சார்பு செயலாளர் தஞ்சை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் கூறினார்.
மருத்துவர்கள் என் உடல் நிலையை பரிசோதித்து, வைரஸ் தொற்று டெங்குவாக இருக்கவும் வாய்ப்புள்ளது என மருந்து அளித்து, நாளை ஒரு நாள் பார்த்து மேற்கொண்டு சோதனை நடத்தலாம் என அறிவுறுத்தினர்.
27.09.2023 தஞ்சாவூர் ஆய்வு பயணத்தையும் சோர்வோடே முடித்து 28.09.2023 அதிகாலை சென்னை வந்து சேர்ந்தேன்.
எனது பொதுவான உடல்நிலை கருதி இன்று காலை முழு உடல் பரிசோதனை மேற்கொண்டேன், அதோடு டெங்கு பரிசோதனையும் மேற்கொண்டேன்.
மருத்துவ பரிசோதனை முடிவுகளின்படி ‘டெங்கு’ தொற்று ஏற்கனவே வந்து சென்றதற்கும், இன்னமும் வைரஸ் தொற்று உள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் இன்னும் மூன்று நாட்களுக்கு ஓய்வும், தட்டணுக்கள் அதிகரிக்கும் உணவும், நீர் அதிகம் உட்கொள்ளவும் அவசியம் என்றும்,
அதன் பின் மீண்டும் பரிசோதனை செய்து, உடல்நலம் சரியானதை உறுதிப்படுத்தி பணிக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர்.
அடுத்து மூன்று நாட்களுக்கு எனது அன்றாட பணிகளையும் செய்ய முடியாத, நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை தோழர்கள் கவனத்திற்கு வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.
03.10.2023 முதல் எனது வழக்கமான பணி தொடரும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் எஸ். எஸ். பாலாஜி.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்
அதிமுக பொதுக்குழு தீர்மானம் : உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!
சித்தா பிரஸ்மீட் : கன்னட அமைப்பினரால் பாதியிலேயே கிளம்பிய சித்தார்த்