குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: அமைச்சர் விளக்கம்!

தமிழகம்

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் பெற்றோர்கள் விரும்பும் பட்சத்தில் தனியார் மருத்துவர்களையும் அழைத்து ஆய்வு செய்ய தயாராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தஸ்தகீர் – அஜிஸா தம்பதி. இவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த ஓராண்டாக தலையில் ரத்த கசிவு காரணமாக அவதிப்பட்டு வந்தது.

இதன்காரணமாக சென்னையில் உள்ள அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் திடீரென அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தையின் வலது கை அழுக தொடங்கியது.

இந்நிலையில், அந்த குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு நேற்று அறுவை சிகிச்சை நடந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தையின் வலது கை முழுவதுமாக அகற்றப்பட்டது.

இச்சூழலில், கை அகற்றப்பட்ட குழந்தையை இன்று(ஜூலை 3) தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்தார்.

பின்னர், அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் மருத்துவமனை டீன் தேரணி ராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.

கை பகுதியில் ரத்த நாளங்களில் அடைப்பு

அப்போது, மருத்துவர் தேரணி ராஜன் கூறுகையில், “ இந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தது. பிறக்கும் போது அந்த குழந்தையின் எடை 1.5 கிலோ தான் இருந்தது. நார்மலாக ஒரு குழந்தை பிறக்கும் போது 2 அரை கிலோவில் இருந்து 4 கிலோ வரை இருக்க வேண்டும் என்று தான் நாம் எதிர்பார்ப்போம்.

முன்னதாக இந்த குழந்தை தேவகோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறது. மூன்று மாதத்தில் இந்த குழந்தையின் தலையின் சுற்றளவு அதிகமானதால் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதன்பின்னர் அந்த குழந்தை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

குழந்தைக்கு கை பகுதியில் இருந்த ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

ரத்த குறைபாட்டால் கையில் நிறம் மாற்றம் ஏற்பட்ட உடனே அதற்கான சிகிச்சை அளித்தோம். குழந்தையின் உயிரைக் காப்பாற்றவே கையை மருத்துவர்கள் குழு அகற்றியது.

தற்போது எழும்பூர் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை மாலை 5 மணிக்குள் முழுமையான விசாரணை அறிக்கை அமைச்சரிடம் சமர்பிக்கப்படும்” என்று கூறினார்.

கவன குறைவால் ஏற்படவில்லை

பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெற்றோர்கள் விரும்பும் பட்சத்தில் தனியார் மருத்துவர்களையும் அழைத்து குழந்தையை ஆய்வு செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். அரசு மருத்துவமனை என்றாலே அலட்சியம் என்ற எண்ணத்திற்கு மக்கள் வந்து விடக் கூடாது.

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டியில் குழந்தை இறந்துவிட்டதாக சொல்கிறார். பின்னர் தவறுதலாக சொல்லிவிட்டேன் என்கிறார். எதுவுமே தெரியாமல், அரசு மருத்துவ சேவையை குறை சொல்லி பேச வேண்டும் என்ற நோக்கத்துடன் பேசுவது சரியானது அல்ல.

எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையை பார்க்கச் செல்ல உள்ளேன். குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் நாளை மாலைக்குள் அதற்கான அறிக்கை வரும். இது கவன குறைவால் ஏற்படவில்லை என எழும்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பிரதமர் மோடி வீடு மீது பறந்த டிரோன்… தலைநகரில் பரபரப்பு!

அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு: தேசியவாத காங்கிரஸ்

+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
1