சென்னை திருவான்மியூரில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரையில் அமைதியாக இயங்கி வந்த கலாஷேத்ரா அறக்கட்டளை, கடந்த சில நாட்களாக பாலியல் புகார்களால் தகித்து காணப்படுகிறது. மாணவிகளின் தொடர் உள்ளிருப்பு போராட்டம், முன்னாள் மாணவியின் புகார் காரணமாக அங்கு பணியாற்றி வரும் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் என்பவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேவேளையில் இந்த அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவத்தின் பின்னணியில் 87 ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த கலாஷேத்ராவை உருவாக்கியது யார்? அங்கு என்ன கற்றுத்தரப்படுகிறது என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

இந்திய பாரம்பரிய கலைகளான பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசைக்கலையை மக்களிடையே எளிதாக கொண்டு செல்லவும், பயிற்றுவிக்கவும் 1936ம் ஆண்டு தொடங்கப்பட்டதே இந்த ”கலாஷேத்ரா”. இதனை ருக்மிணி தேவி அருண்டேல் என்பவர் ஒரே ஒரு மாணவியுடன் தொடங்கினார். இன்று அடையாற்றின் விளிம்பில் சென்னையின் ஒரு கலாச்சார அடையாளமாக சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பசுமையாக பரந்து விரிந்திருக்கும் இக்கலைக்கல்லூரியில் தற்போது பல்வேறு நாடுகள், மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி கலைகளை பயின்று வருகின்றனர்.
இவை அனைத்திற்கு கலைகளை காக்கும் கனவுடன் விதை போட்டது ருக்மணிதேவி அருண்டேல். அவருடைய ஆர்வமும், தன்முனைப்பும் தான் ”கலாக்ஷேத்ரா” வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

யார் இந்த ருக்மணி தேவி அருண்டேல்?
மதுரையைச் சேர்ந்த நீலகண்ட சாஸ்திரி – சேஷம்மாள் தம்பதியினருக்கு மகளாக 1904ஆம் ஆண்டு பிறந்தவர்தான் ருக்மணிதேவி அருண்டேல். பெண் சுதந்திரம் குறித்து மூச்சுவிடுவதற்கு கூட சிரமப்பட்ட அந்த காலத்தில் சிறுவயது முதலே புரட்சிகரமான பாதையில் நடக்க பழகினார் ருக்மணி தேவி.
அதற்கு காரணாமாக இருந்தவர் சென்னையில் அடையாறில் தியசோஃபிக்கல் சொஸைட்டி எனப்படும் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவியவரான அன்னி பெசண்ட் அம்மையார். ருக்மணி தேவியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி ஒரு மிகப்பெரிய வேத பண்டிதர். அவர் அன்னி பெசண்டின் தியோசாபிகல் சொசைட்டியில் 1906ஆம் ஆண்டு சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வந்தார்.
இதனால் அடையாறுக்கு ருக்மணி தேவியின் குடும்பம் குடியேறியதால் திருவல்லிக்கேணி பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். தனது 16வது வயதில் தியோசாபிகல் சொசைட்டியில் நடத்தப்படும் ஆண்டுவிழாவில் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ‘மாலினி’ என்ற நாடகம் அரங்கேறியபோது, ருக்மணிதேவி அதில் நடித்து கேதாரகௌள ராகத்தில் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை, ருக்மணிதேவியை இசை பயில ஊக்கப்படுத்தினார். ருக்மணி தேவி அதை பயன்படுத்தி அங்கு கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார்.
அதேவேளையில் ருக்மணியின் தாய் சேஷம்மாள் ஒரு கர்நாடக இசைக் கலைஞர் கூட. அதனால் அவரது வாழ்வில் சிறுவயதிலேயே இசையும், நடனமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இதற்கிடையே 1920ஆம் ஆண்டில் அன்னி பெசன்ட் அம்மையார், ஜார்ஜ் அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக நியமித்தார்.
அப்போழுது நடைபெற்ற ஒரு தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், ருக்மணி தேவியும் சந்தித்துக்கொள்ள, இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. பின்னர் அன்னிபெசண்ட் அம்மையாரின் அனுமதியோடு, ருக்மணிதேவி – ஜார்ஜ் அருண்டேல் திருமணம் நடைபெற்றது.
அக்காலத்தில் ஆச்சாரமுள்ள பிராமண குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண், வெளிநாட்டுக்காரரை மணப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இத்திருமணம் அந்த காலக்கட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

பரதநாட்டியமாக மாறிய சதிர்
புதிதாக திருமணமான தம்பதியினர் சில காலம் லண்டனில் தங்கியிருந்தனர். அப்போது, கலையை நேசிக்கும் ருக்மணி தேவி ரஷ்ய நடனக்கலைஞர் அன்னா பாவ்லோவாவை சந்தித்தார். அவரிடம் பாலே நடனமும் கற்றுக் கொண்டார் ருக்மணி தேவி. அந்த பாவ்லோவாதான் இந்திய பாரம்பரிய கலைகளை ருக்மணி கற்றுக் கொள்வதற்கு ஊக்குவித்தார்.
1933ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய ருக்மணி தேவி, சென்னையில் உள்ள ஒரு மியூசிக் அகாடமியில் கிருஷ்ண ஐயர் என்பவர் ஏற்பாடு செய்திருந்த சதிர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சதிர் என்று குழப்பம் வேண்டாம். சதிர் என்பது பரதநாட்டியம் தான். ஆனால் கடந்த ஆண்டு வெளிவந்த ஷியாம் சிங்க ராய் படத்தில் காட்டியது போன்று தேவதாசிகள் மட்டுமே அதனை ஆட அனுமதிக்கப்பட்டனர்.

அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினை கண்டு ஈர்க்கப்பட்டார் ருக்மணிதேவி. அக்கலையினை எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்தார். அதன்படி பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மா என்பவரிடம் தனியாகக் கற்க ஆரம்பித்தார். இதற்கு ருக்மணிதேவியின் கணவரான ஜார்ஜ் அருண்டேல் உறுதுணையாக இருந்தார்.
பின்னர் தனது 30வது வயதில் பாண்டநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் பரதநாட்டியத்தை கற்றார். 1935ஆம்ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, தான் கற்ற நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தார் ருக்மணி. இது பரத நாட்டிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து மைசூர் மகாராஜாவின் ஆஸ்தான வித்வானாக விளங்கிய தெய்வீக இசைப் புலமை வாய்ந்த வாசு தேவாச்சாரியாரின் உதவியுடன், ‘வால்மீகி இராமாயணம்’ என்ற நடன நிகழ்ச்சியைத் தயாரித்தார். அவர் உருவாக்கிய வால்மீகி ராமாயண நாட்டிய நிகழ்ச்சி பலரின் பாராட்டுக்களைப் பெற்றது. ருக்மணிதேவியின் நடனம், அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது.

கலாஷேத்ரா உருவானது
இதனையடுத்து தேவதாசிகள் மட்டுமே ஆட அனுமதிக்கப்பட்ட சதிர் நாட்டியத்திற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார். மேலும் இதனை சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருந்தார் ருக்மணிதேவி. எனவே அதற்காக ”கலாஷேத்ரா” என்ற கலைப் பள்ளியினை 1936 ஆம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி முதன் முதலாக சென்னை அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் தோற்றுவித்தார்.
ருக்மணி அருண்டேலின் முதல் முயற்சியாக பரத நாட்டியத்திற்கு ’கலாக்ஷேத்ரா’ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்மூலம் பரத நாட்டியத்தில் சிற்றின்பம் எனப்படும் சிருங்கார கூறுகளை அகற்றி, அதற்கு பதிலாக பக்தியின் அசைவுகளை கொண்டுவந்தார். மேலும் பரதநாட்டியத்திற்கென தனியாக நேர்த்தியான ஆடைகள், நகைகள், இசை, மற்றும் மேடை காட்சிகளையும் அறிமுகப்படுத்தினார்.
மேலும் பரதநாட்டியத்தில் நடன-நாடக வடிவத்தை அறிமுகப்படுத்தி எண்ணற்ற பரத நாட்டியக் காட்சிகளை உருவாக்கினார். தன் சகோதரரின் மகளான ராதா என்பவரை மாணவியாக கொண்டு தொடங்கப்பட்ட கலாஷேத்ராவில் போகப்போக பல ஊர்களிலிருந்தும் அதிகளவில் நாட்டியம் பழக மாணவிகள் வந்து சேர ஆரம்பித்தனர்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ருக்மணிதேவி தன் மாணவர்கள் குழுவுடன் பயணம் மேற்கொண்டு முதலில் குற்றாலத்தில், ‘குற்றாலக் குறவஞ்சி’, நாட்டிய நாடகத்தை அரங்கேற்றம் செய்தார்.
அவருடன் பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர், காளிதாஸ் நீலகண்ட ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார், டைகர் வரதாச்சாரியார், பாபநாசம் சிவன் போன்ற இசைக்கலைஞர்கள் கலாஷேத்ராவில் பணியாற்றி இசையையும், நடனத்தையும் ஒருங்கே வளர்த்தனர்.

மத்திய அரசின் கீழ் கலாஷேத்ரா
1950களில், கமலாதேவி சட்டோபாத்யாயா தலைமையில் இருந்த அகில இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி வாரியத்திடம் இருந்து, நெசவாளர்களுக்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கும், இயற்கை சாயங்களின் பயன்பாட்டை புதுப்பிக்க ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கும் இந்த மையம் உதவி பெற்றது.
பின்னர் 1962ம் ஆண்டில் திருவான்மியூரில் உள்ள அடையார் கழிமுகம் அருகே புதிய வளாகம் நிறுவப்பட்டது. 1993ம் ஆண்டு இந்த அறக்கட்டளையானது இந்திய அரசாங்கத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இது இப்போது மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக உள்ளது.
கலாஷேத்ரா அறக்கட்டளையில் உள்ள நுண்கலை நிறுவனம், ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாணவர்களுக்கு பரதநாட்டியம், கர்நாடக இசை, கைவினை மற்றும் ஓவியம் உள்ளிட்ட கலைக் கல்வித் திட்டங்களை வழங்குகிறது. இத்துடன் பள்ளிகளையும் கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வகிக்கிறது. இங்கு ஒரு நூலகம், ஒரு தங்கும் விடுதி, ஒரு அருங்காட்சியகம், ஒரு ஜவுளி-கைவினை மையம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்நிறுவனத்தின் பல முன்னாள் மாணவர்கள் பத்மஸ்ரீ மற்றும் சங்கீத நாடக அகாடமி விருதுகளை பெற்றுள்ளனர். இங்கு பயின்ற குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களாக லீலா சாம்சன் ஸ்வகதா சென் பிள்ளை, ஆனந்த சங்கர் ஜெயந்த், ராதா பேர்னியர், சாரதா ஹொஃப்மன், அடையாறு லட்சுமணன், வி. பி. தனஞ்சயன் என பலர் உள்ளனர்.

குடியரசுத் தலைவர் பதவி மறுப்பு
விலங்குகள் மீது அன்பு கொண்ட ருக்மணி அருண்டேல் இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தபோது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார்.
1977ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மணிதேவியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார்.
இந்திய கலாச்சாரத்திற்கான அவரது சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், அருண்டேல் 1956 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதைப் பெற்றார். மேலும் 1957 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது, காளிதாஸ் சம்மான் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் வேய்ன் பல்கலைக்கழகம், கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஆகியவை ருக்மணிதேவிக்கு டாக்டர் பட்டங்கள் அளித்து கௌரவித்தன.
”அத்தை” என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ருக்மணிதேவி, தன்னுடைய 82-வது வயதில் 1986 பிப்ரவரி 24ஆம் தேதியன்று காலமானார்.

கடந்த 2004ம் ஆண்டு ருக்மணி அருண்டேலின் 100வது பிறந்தநாளை கலாஷேத்ரா மற்றும் உலகின் பல பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கடராமனின் முன்னுரையுடன் சுனில் கோத்தாரி எழுதி தொகுத்த ருக்மணி அருண்டேலின் புகைப்பட – சுயசரிதை ஒன்றை வெளியிட்டார்.
மேலும் கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வருகையையொட்டி, கலாஷேத்ராவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது உலகளவில் பேசப்பட்டது.
அவரது மறைவுக்கு பிறகு பல்வேறு நபர்கள் கலாஷேத்ராவில் நிர்வகித்து வந்துள்ள நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டுமுதல் ராமதுரை தலைவராகவும், 2018ம் ஆண்டு முதல் ரேவதி ராமச்சந்திரன் இயக்குநராகவும் உள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல் புகார்
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகளிடம் அங்குள்ள ஆசிரியர்கள் மூலம் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 2005 முதல் 2012 வரை கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநரும், மூத்த நடிகையுமான லீலா சாம்சன் தனது முகநூல் கணக்கில் ஆசிரியரின் பெயரை குறிப்பிடாமல் ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்தார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து ‘பாலியல் தொல்லை’ என ட்விட்டர் பதிவு போட்டு, மார்ச் 21-ம் தேதி நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு கடிதம் எழுதியது. கலாஷேத்ரா புகார் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார் டி.ஜி.பி சைலேந்திர பாபு.
இது தொடர்பாக கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் டிஜிபியை சந்தித்து, தங்கள் நிறுவனத்தில் பாலியல் புகார் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட மாணவி, தனது பெயரையும் கல்லூரியின் பெயரையும் கெடுப்பதற்காக வேண்டுமென்றே தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், இதை பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து கடந்த 26ம் தேதி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேரடியாக கலாஷேத்ராவுக்கு நேரில் வந்து அங்கு மாணவிகளிடம் விசாரித்து சென்றுள்ளார். மேலும் தேசிய மகளிர் ஆணையம் டி.ஜி.பிக்கு அனுப்பிய நோட்டீஸையும் திரும்ப பெற்றது.
ஆனால் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, தற்போது பயின்று வரும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் தொடந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ருக்மணிதேவி கல்லூரி வரும் 6-ஆம் தேதி வரை மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்தது.

ஆனாலும் மாணவிகளின் போராட்டம் தொடர்ந்த நிலையில், கலாஷேத்ரா விவகாரம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
நேற்று தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமாரி கலாஷேத்ராவுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் ஹரிபத்மன், நடன பயிற்சியாளர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது மாணவிகள் புகார் எழுப்பினர்.
பேராசிரியர் மீது வழக்குப்பதிவு
இதனைதொடர்ந்து நேற்று (மார்ச் 31) செய்தியாளர்களை சந்தித்த குமாரி, ”4 ஆசிரியர்கள் மீது சுமார் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமான புகாரினை அளித்துள்ளனர். 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்து இருந்தார். அதனைத்தொடர்ந்து மாணவிகளின் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி தனது தோழியுடன் நேற்று மாலை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் என்பவர் மீது புகார் அளித்தார். இதையடுத்து மகளிர் போலீசார், உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ஹரிபத்மன், ஹைதராபாத்தில் அரங்கேற்றம் நிகழ்ச்சியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவரை சென்னைக்கு வரவழைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் ஹரிபத்மனிடம் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை தொடர்பாக வாக்குமூலத்தை மகளிர் போலீசார் பதிவு செய்ய உள்ளனர்.
இதனையடுத்து கலாஷேத்ரா பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கலாஷேத்ரா கல்லூரியின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் துணை இயக்குநர் பத்மாவதி ஆகியோர் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பழம்பெருமை வாய்ந்த கலாஷேத்ரா கல்லூரியில் நடந்துள்ள பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.
கலை, கலாச்சாரம் மீதான காதலால் அரும்பாடுபட்டு ருக்மணி தேவி அம்மையார் உருவாக்கிய ஆலமரமான கலாஷேத்ராவை… அதன் விழுதுகளே வீழ்த்தும் வகையில் செயல்படுவது வேதனைக்குரியது.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தியாவிற்கே வழிகாட்டியது வைக்கம் போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
வெற்றிமாறனின் விடுதலை : வசூல் எவ்வளவு?
Cases should also be filed against its President and Director for suppressing and abetting the crime