காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜூனைத் அகமது. காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர். இவர் சி.டி.ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸிடம் ரூ.20 லட்சம் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
இந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்னை வந்த முகமது கவுஸ், கடந்த டிசம்பர் 16ஆம் தேதி இரவு, ஓமந்தூரார் மருத்துவமனை பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது வாகனத்தை நிறுத்தி திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் நடத்திய விசாரணையில் முகமது கவுஸ் கொண்டு வந்த ரூ.20 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து அந்த பணத்தை ராஜா சிங் தனது கூட்டாளிகளான வருமானவரித் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பிரபு (31), ஆய்வாளராக பணியாற்றிய தாமோதரன் (41), ஊழியர் பிரதீப் (42) ஆகியோர் மூலம் முகமது கவுஸிடமிருந்த பணத்தை பறித்திருக்கிறார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், ராஜாசிங், பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகியோரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.
ராஜாசிங்கை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் 4 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (ஜனவரி 22) விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், “இந்த வழக்கில் இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க உள்ளதால் ஜாமீன் கோரிய விசாரணையை தள்ளி வைக்கவேண்டும்” என்று வாதிடப்பட்டது.
போலீஸ் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வேலியே பயிரை மேய்ந்தது போல் காவல்துறையினரே குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட இந்த வழக்கினை சாதாரண வழக்காக எடுத்து கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்தார்.
வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
யார் இந்த ராஜா சிங்?
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தவர். 2014-ல் யானைகவுனி காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராக பணியிருந்த ராஜா சிங், அந்த பகுதி வியாபாரி ஒருவரிடம் 1.50 லட்சம் ரூபாய் வழிபறி செய்ததாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் சென்னையில் முகமது கவுஸிடம் 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு போலீஸ் அதிகாரி யார்?
ராஜா சிங் உள்ளிட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பது தெரியவந்திருக்கிறது.
இந்த சம்பவத்தை தவிர கடந்த சில ஆண்டுகளாக வழிபறி செய்ததில் சன்னி லாய்டு ஜாம் பஜார் பகுதியில் ஒரு அதிநவீன உடற்பயிற்சி கூடம் அமைத்து இருப்பதும், ஈசிஆர் பகுதியில் ரிசார்ட் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தன்னை போலீசார் தேடுகிறார்கள் என்று தெரிந்ததும் சன்னி லாய்டு தலைமறைவானார். அவரை, திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கடந்த ஜனவரி 14ஆம் தேதி அங்கு சென்று கைது செய்தனர். சன்னி லாய்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் மீதான வழக்கில் தான், போலீசாரே குற்றச்செயல்களில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார்.