சென்னையில் பிரியாணி கேட்ட மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கணவனே கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் கருணாகரன்(75). இவரது மனைவி பத்மாவதி (65). இந்த தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற கருணாகரன் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.
மன அழுத்தம் காரணமாக கருணாகரனும், பத்மாவதியும் பாதிக்கப்பட்டு சில காலம் சிகிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று(நவம்பர் 7) இரவு, கருணாகரன் வீட்டிற்கு பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது மனைவி பத்மாவதி தனக்கும் பிரியாணி வேண்டும் என கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கருணாகரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து பத்மாவதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் பத்மாவதி அலறியடித்துக் கொண்டே கணவர் கருணாகரனை கட்டிப்பிடித்துள்ளார். இதனால், கருணாகரன் மீதும் தீப்பற்றியுள்ளது.
இருவரின் அலறல் சத்தம் கேட்டுச் சென்ற அக்கம்பக்கத்தினர் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பத்மாவதி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் மரணம் வாக்குமூலம் அளித்தார்.
கணவர் மட்டும் தனியாக பிரியாணி வாங்கி சாப்பிட்டதாகவும் தனக்கும் பிரியாணி வாங்கி தர கேட்டபோது பிரச்சனை ஏற்பட்டு, தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இந்தநிலையில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த கருணாகரனும், 50 சதவீத தீக்காயங்களுடன் தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலை.ரா
மழைநீரை அகற்றாமல் கான்கிரீட்: இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்!
போக்கஸில் சிக்கிய அஸ்வின்: கலாய்க்கும் ரசிகர்கள்!